உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி

2 mins read
f9aa3880-85f6-4bbc-a80d-cff178a4ef4b
உண்ணாவிரதம் இருந்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லிக்கு தண்ணீர் வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததால் செவ்வாய்க்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் தளப் பதிவில், “அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த சர்க்கரை அளவு நள்ளிரவில் 43 ஆகவும் அதிகாலை 3 மணிக்கு 36 ஆகவும் குறைந்தது. பின்னர் எல்என்ஜெபி மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர்.

“லோக் நாயக் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் அதிஷி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“அவர் கடந்த ஐந்து நாள்களாக எதுவும் சாப்பிடாமல், டெல்லிக்கு வழங்கவேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 21 அன்று அதிஷி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “அதிஷி கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை நிறுத்தும்படியும் உடனடியாக அதிஷியை மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் பரிந்துரைத்தனர்.

“இல்லையெனில் உயிரை இழக்க நேரிடும் என்றனர். டெல்லிக்கு தண்ணீர் விடுமாறு பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுகிறோம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்படுகிறது, ஆனால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்