நாடெங்கும் உள்ள இந்திய இளையர்களைத் திரட்டி, குடும்பங்கள், முதியவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், குழந்தைகள் முதலியோருக்கு ஆதரவளிக்கும் வகையில் காலை முதல் இரவுவரை தொடர்ச்சியான சமூகத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொண்டுள்ளம் கொண்ட இளம் தலைவர்களை உருவாக்கும் சிண்டா

3 mins read
8fd51e3c-beda-48f8-ab1c-d8ef64e8f808
சிண்டாவின் 24 மணி நேர சேவை ‘யூத்கிவிங்24’ முன்முயற்சியில் இளம் தொண்டூழியர்கள் பங்கேற்றனர். - படம்: சிண்டா
multi-img1 of 2

தன்னார்வத் தொண்டு, கற்றல், இளையர்கள் தலைமையிலான செயல்பாடுகள் நிரம்பிய சிண்டா இளையர் மன்றத்தின் முதல் 24 மணி நேரச் சேவை முன்முயற்சியான ‘யூத்கிவிங்24’ (YouthGiving24) நவம்பர் 23ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

சிண்டாவின் 24 மணி நேரச் சேவை ‘யூத்கிவிங்24’ முன்முயற்சியில் இளம் தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.
சிண்டாவின் 24 மணி நேரச் சேவை ‘யூத்கிவிங்24’ முன்முயற்சியில் இளம் தொண்டூழியர்கள் பங்கேற்றனர். - படம்: சிண்டா

இளம் தொண்டூழியர்கள் உணவுப் பொட்டலங்களைத் தயாரிப்பதுடன் உணவு வீணாவதைக் குறைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

குழந்தைகள், முதியோர், சிறப்புத் தேவையுள்ளோருக்கு நட்பைப் பறைசாற்றும் வகையில் விளையாட்டுகளையும் கைவினைப் பயிற்சிகளையும் வழிநடத்தினர்.

மற்றோர் அங்கமாக இந்திய மரபுடைமை நிலையத்தில் சுகாதார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு, இதய ஆரோக்கியம், சரியான ஊட்டச்சத்து, பல் பராமரிப்பு போன்ற முக்கியமான ஆரோக்கியத் தலைப்புகளில் நடைமுறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெற்ற சுகாதார விழா
இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெற்ற சுகாதார விழா - படம்: சிண்டா

தொண்டு நடவடிக்கைகளுக்கிடையே இளையர்கள் தனிமை, சமத்துவமின்மை, உணவுப் பாதுகாப்பின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.

இறுதியாக சமூகத்திற்குத் தொடர்ந்து எப்படிப் பங்களிக்க முடியும் என்பது குறித்து அவர்கள் சிந்தனைகளைப் பகிர்ந்தனர்.

பங்கேற்றவர்கள் பலரும் இப்பயிற்சிகள் ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பயணமாக அமைந்ததாகத் தெரிவித்தனர்.

‘ஸ்டெப் அப்! ஹெல்த் ரோட்ஷோ’ (Step Up! Health Roadshow) திட்டத்தை வழிநடத்திய 22 வயது ஸ்ருதி முரளிகிருஷ்ணா, இதில் ஈடுபட்டது தம்மை புதிய சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றி யோசித்து செயல்படத் தூண்டியது என்றார்.

தலைவராகச் செயல்பட்டது தமக்குப் புதிய, செறிவூட்டும் அனுபவமாக இருந்தது என்று சொன்ன அவர், 60க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து வலுவான வரவேற்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், சமூகத்தில் வளர்சிதை மாற்ற நோய்கள் (Metabolic Diseases) அதிகரித்து வருவதைச் சுட்டிய ஸ்ருதி, இந்திய சமூகத்தில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தம் மனத்திற்கு மிகவும் நெருக்கமான செயல் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த இளையர்களில் ஒருவரான 18 வயது செல்வம் சங்ரீத், இந்த அனுபவம் தமது அனுதாபத்தை ஆழப்படுத்தியதாகக் கூறினார்.

“நமது வெளிநாட்டு ஊழியர்களுடன் நெருங்கிப் பணியாற்றியது, மனிதர்களாகிய நாம் அனைவரும் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள்தான் என்பதை எனக்கு உணர்த்தியது.

“அவர்கள் ஓய்வெடுத்து, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தபோது, ஒரு சிறிய செயல்கூட ஒருவரின் முழு நாளைப் பிரகாசமாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன்,” என்றார் செல்வம்.

வீடற்றவர்கள் (rough sleepers) முதல் வெளிநாட்டு ஊழியர்கள்வரை பலர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய தம் புரிதல் விரிந்ததாக 19 வயது அபயசுகுமாரன் கூறினார்.

“அனைவருக்கும் பொதுவான மொழி இல்லையென்றபோதும் எவ்வாறு ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன். கனிவு இருந்தால், சிறிய செயல்கள்கூட அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்றார் அவர்.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் உதவிய 23 வயது சரணிஷா சரவணன், இந்த அனுபவம் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதன் மதிப்பை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.

“நிகழ்ச்சிகள் இரண்டு மணிநேரம் மட்டுமே நீடித்தாலும், பிறரை மகிழ்வித்து, அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது,” என்ற அவர், இதற்குப் பிறகும் தொண்டூழியத்தைத் தொடர விருப்பமுள்ளதாக தெரிவித்தார்.

இளம் தொண்டூழியர்களின் முயற்சிகளையும் வளர்ச்சியையும் சமூகப் பங்காளிகள், குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் நிறைவு விழாவில் அங்கீகரித்துக் கொண்டாடினர்.

கருணையையும் உடனடி செயல்முறையையும் இணைத்த ‘யூத்கிவிங்24’ முன்முயற்சி, ஒரு நாளைத் தாண்டியும் நீடிக்கும் சேவை மனப்பாங்குள்ள இளம் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்