சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கெமர் பாரம்பரிய கட்டடக்கலையின் சான்றாக விளங்கிய தா கிராபெய் ஆலயத்தை தாய்லாந்து ராணுவம் குறிவைத்துத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
டங்கிரெக் மலைத் தொடர்களுக்குள் பதினோறாம் நூற்றாண்டில் சூரியவர்மன் 1, உதயாதித்யவர்மன் 2, ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டு, காடுகள் சூழப்பட்டாலும் கம்போடிய மக்களால் போற்றி வணங்கப்பட்டுவரும் புனிதத் தலம் தா கிரொபெய் ஆலயம்.
அதன் மரபையும் ஆன்மீக வளத்தையும் தம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள முக்கியமான தனித்துவ பாரம்பரியமாகக் கருதி கம்போடியர்கள் அதனை பராமரித்து வந்துள்ளனர். பிரஞ்சு ஆய்வாளர்கள் அவ்விடத்தை 1900ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்தாலும் அதன் புனிதத்தை மக்கள் மறந்துவிடவில்லை.
தாய்லாந்து அவ்வப்போது தன்னுடையது என்று உரிமை கொண்டாடிய பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களில் இந்த ஆலயம் பட்டியலிடப்படவில்லை.
எனினும் ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அந்த ஆலயத்தை டிசம்பர் 8ஆம் தேதி தாய்லாந்து ராணுவம் சில நிமிடங்களில் தகர்த்துவிட்டது. மரபுடைமை மிகுந்த பகுதி என்று நன்கு அறிந்திருந்தும் பல நூற்றாண்டுகளாக அதன் கட்டடக் கலைகள் தாக்குப்பிடித்துள்ளன என்பதை உணர்ந்தும் கம்போடிய மக்கள் பாதுகாத்துவரும் பாரம்பரியம் என்பதை தெரிந்தே தாய்லாந்து அதன்மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்படி, சண்டை நிறுத்தம் மட்டுமின்றி அனைத்துலகச் சட்டப்படி, கலாசார பாதுகாப்பின் அடிப்படைக் கொள்கைகளை தாய்லாந்து மீறியுள்ளது.
அதே நாளிலும் டிசம்பர் 10ஆம் தேதியும் யுனெஸ்கேவால் உலக மரபுடைமைச் சின்னமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரயெ விஹார் ஆலயம் இரண்டு முறை தாய்லாந்தால் தாக்கப்பட்டது.

