சென்னையில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு; விழிபிதுங்கும் சென்னை மாநகராட்சி

சென்னையில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு; விழிபிதுங்கும் சென்னை மாநகராட்சி

1 mins read
b2d297e1-521d-4cd6-90bb-482c249bce0c
மூன்று ஆண்டுகள் நீடித்த கணக்கெடுப்பின் முடிவில், சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது. - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தெரு நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி திணறிவருவதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சென்னையில் தற்போது 33,000 தெருநாய்கள் கண்காணிப்பின்றி சுற்றித் திரிகின்றன. மாநகரில் நாளுக்கு நாள் நாய்க்கடிக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாநகராட்சியின் கால்நடைப் பராமரிப்புப் பிரிவு கடந்த 2021ஆம் ஆண்டு தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்பாக கணக்கெடுப்பு ஒன்றைத் தொடங்கியது.

மூன்று ஆண்டுகள் நீடித்த கணக்கெடுப்பின் முடிவில், சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.

ஆண்டுதோறும் சென்னையில் 2,000 பேர் நாய்க்கடி பாதிப்பிற்காக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதையடுத்து, தெரு நாய்களுக்கு ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடைச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

கடந்த 2021 முதல் 2025 வரை சென்னையில் 88,087 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுள் 71,108 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

கடந்த 2025ஆம் ஆண்டு தெருநாய்களுக்கு ‘நுண் சில்லு’ பொருத்தி கண்காணிக்க மாநகராட்சி முடிவு செய்தது. சென்னையில் இதுவரை 1.47 லட்சம் நாய்களுக்கு மட்டுமே ‘நுண் சில்லு’ பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மீதமுள்ள 33,000 நாய்கள் கண்காணிப்பு, கருத்தடை சிகிச்சையின்றி சாலைகளில் திரிகின்றன. இதன்மூலம் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் பயனளிக்கவில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னையில் மட்டும் 31,000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்