ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள கார் நிறுத்துமிடமொன்றில் கட்டுமான நிறுவனம் மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகளின்போது, நடைபாதையில் இருந்த தண்ணீர்க் குழாய் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடந்த சம்பவத்தின்போது வெள்ளம் ஏற்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கேட்ட கேள்விக்குப் பதில் தந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், இப்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியது. சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் பணிகளை மீண்டும் தொடங்கும் முன்னர், வேலை நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் என்று கழகம் தெரிவித்தது.
மேம்பாட்டுப் பணிகளின்போது குழாய் சேதமுற்றதாய்க் காலை 10 மணியளவில் தகவல் கிடைத்தது என்று அது சொன்னது.
ஹவ்காங் ஸ்திரீட் 52ல் உள்ள புளோக் 534க்கு அருகே தண்ணீர்க் குழாய் உள்ளது என்று தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி (PUB) தெரிவித்தது. பிரச்சினை பிற்பகல் 1.45 மணிவாக்கில் சரிசெய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
சுற்றியுள்ள வட்டாரத்தில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் அமைப்பு சொன்னது.
சம்பவம் குறித்த புலனாய்வு நடைபெறுவதாகவும் தேவைப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
தண்ணீர்க் குழாய்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, அமைப்புகளும் கட்டுமான நிறுவனங்களும் வேலையைத் தொடங்கும் முன்னர் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று பியுபி மீண்டும் நினைவூட்டியது.

