பொதுச் சுகாதாரத்தில் பணியாற்றும் இளம் மருத்துவரான மா. பிரெமிக்கா ‘எஸ்பிஎச் மீடியா’ (SPH Media) வழங்கும் முதல் அறிந்துள்ளதை அறிக (Know What They Know) பிரசாரத்தில் இடம்பெற்றுள்ளார்.
டிசம்பர் 26 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 வரை நடைபெறும் இந்தப் பிரசாரம் வாயிலாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், பிஸ்னஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு உள்ளிட்ட பல நாளிதழ்களை ஒன்றிணைக்கிறது ‘எஸ்பிஎச் மீடியா’.
தகவல் தொடர்பு நிறுவனமாக மட்டுமின்றி, சமூகங்களை இணைத்து மக்களை வலுப்படுத்தி, அறிவார்ந்த குடிமக்களை உருவாக்கும் நம்பகமான ஊடகமாக ‘எஸ்பிஎச் மீடியா’வை நிலைநிறுத்துவது இந்தப் பிரசாரத்தின் இலக்கு.
இளையர்களின் குரல்களின் வழி முன்னெடுக்கப்படும் இந்த பிரசாரத்தில் தமிழ் முரசை பிரதிநிதித்து காணொளியில் இடம்பெற்றுள்ளார் மருத்துவர் பிரெமிக்கா, 30.
கடந்த 2014ல் தமிழ் முரசு நாளிதழில் செய்தியாளராக ஐந்து மாதங்களுக்கு வேலைப்பயிற்சி மேற்கொண்ட இவருக்கு, இளம் வயதிலிருந்தே செய்தி வாசிக்கும் பழக்கம் உண்டு.
அதன் மூலம் அவரது தமிழ் மொழித்திறன் வளர்ந்ததோடு, சமூக சிக்கல்களில் ஆழமான ஆர்வமும் கவனமும் இவருக்கு உருவானது.
“ஒவ்வொரு மருத்துவ ஆவணங்களுக்குப் பின்னாலும் மனிதத்தின் கதை, அதன் வரலாறு, அதைச் சார்ந்த குடும்பம், வேலை, சமூகம் என எல்லாமே அடங்கிய ஒரு கட்டமைப்பு மறைந்து இருக்கிறது,” என்றார் மருத்துவர் பிரெமிக்கா.
அவ்வகையில், ‘‘இத்தகைய தகவல்களை அறிந்துகொள்வதற்கான வழியாக மட்டுமின்றி தாம் சேவை செய்யும் மக்களுடன் இணைந்திருப்பதற்கான பாலமாகவும் இதழியல் துறை செயல்படுகிறது,’’என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்த இளம் மருத்துவர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது களம்கண்டுள்ள இந்தப் பிரசாரம், வாழ்க்கையின் வெவ்வேறு சூழல்களில் மக்களின் கண்ணோட்டங்களை வடிவமைத்து, இளம் தலைமுறையினருக்குப் பொருத்தமாக ‘எஸ்பிஎச்’ இதழியல் எவ்வாறு திகழ்கிறது என்பதை எடுத்துரைக்க நோக்கம் கொண்டுள்ளது.
உரையாடல் கூறும் உண்மைக் கதைகள்
‘‘பணி நிமித்தமாக மக்களோடு உரையாடும்போது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்வர். அவ்வாறு சொல்லப்படும் கதைகளிலிருந்துதான் அவர்கள் நோய்க்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்கள் வெளிவரும்,’’ என்ற பிரெமிக்கா, அவ்வகையில், தம் மருத்துவப் பணியிலும் தமிழ் மொழி முக்கிய பங்காற்றி வருகிறது என்று குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவலின்போது, வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிடமான தங்கும் விடுதிகளில் நேரடியாகப் பணியாற்றிய அனுபவம் இவரது மருத்துவப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்தச் சூழலிலும் தமிழ் மொழியின் பங்கு அளப்பரியதாக விளங்கியது என்ற பிரெமிக்கா தொடர்ந்து பேசினார்.
“தமிழ் பொதுவான மொழி. ஆனால் அதற்கும் மேல், அது பொதுவானதொரு புரிதலை நல்கும் தளம். மருத்துவத்தில் இந்தத் தொடர்பே பேரளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே என் ஆழ்ந்த நம்பிக்கை,’’ என்றார் அவர்.
அறிந்துள்ளதை அறிக பிரசாரத்தின் காணொளிகள், விளம்பர பதாகைகள் ‘எஸ்பிஎச்‘ மீடியாவின் சமூகத் ஊடகத் தளங்களில் மட்டுமின்றி, பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள் போன்ற பொது இடங்களிலும் வெளியீடு காண்கின்றன.

