மருந்துப் புட்டிக்குள் புழுக்கள்: மத்தியப் பிரதேசத்தில் மேலும் அதிர்ச்சி

1 mins read
d4b0dc33-a8df-4813-a626-1738fdc9a15c
300க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துப் புட்டிகளும் திரும்பப் பெறப்பட்டன. - படம்: ஊடகம்

போபால்: இருமல் மருந்து குடித்த இருபதுக்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மத்தியப் பிரதேச மாநில மக்கள் இன்னும் மீளவில்லை.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருந்துக் கரைசலில் புழுக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

‘கோல்டிரிஃப்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக்கொண்ட 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் அடுத்தடுத்து உயிரிழந்தன.

அனைவரும் சிறுநீரகச் செயலிழப்பால் மாண்டுபோனதும், மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்டதால்தான் அம்மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், குவாலியர் மாவட்டம் மொரார் நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு ‘அசித்ரோமைசின்’ நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது.

அதை வாங்கிய குழந்தையின் தாய், உற்றுக் கவனித்தபோதுதான் மருந்துப் புட்டிக்குள் பல புழுக்கள் இருந்தது தெரியவந்தது.

கடும் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் புகார் தெரிவிக்க, உடனடியாக அங்குள்ள அனைத்து மருந்துகளையும் பயன்படுத்த முடியாதபடி முத்திரை வைக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துப் புட்டிகளும் திரும்பப் பெறப்பட்டன.

நோய்த் தொற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மருந்துக் கரைசல்களும் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் ஆய்வு முடிவுகள் வந்தபின், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு மருத்துவமனை மருந்து ஆய்வாளர் அனுபூதி சர்மா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்