தொழில்நுட்பத் திறனையும் சமூகச் சிந்தனையையும் இணைத்து மக்களுக்கு நன்மை பயக்க விரும்புகிறார் ‘கவ்டெக்’ அறிவார்ந்த தேசம் உபகாரச் சம்பளம் (Smart Nation Scholarship (GovTech)) பெற்ற சிவா ஆதர்ஷ், 23.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் குடும்ப உபகாரச் சம்பள விருது விழாவில், சிங்கப்பூரின் தொழில்நுட்ப, ஊடக, தகவல் துறைகளில் 81 பேருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர்ச் சந்திப்புகளில் (Meet-the-People sessions), கடந்த மூன்று ஆண்டுகளாகப் பலரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, வெவ்வேறு அமைப்புகளுக்கு மனு எழுதி உதவி வருகிறார் சிவா ஆதர்ஷ்.
குடும்பங்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகும்போது அவற்றுக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவினாலும், முன்கூட்டியே உதவியை நல்க முடியுமா என்று தரவு அறிவியல், இயந்திரக் கற்றல் வழி அவர் விடைகாண விழைகிறார்.
ஒருவரின் கல்வி, வேலை, குடும்பப் பின்னணி சார்ந்த தரவுகளைச் சேகரித்து, அத்தகையோரிடத்தில் பொதுவாகக் காணப்படும் கூறுகளுடன் ஒப்பிட்டு, தேவைப்படும் உதவியை அடையாளம் காணலாம் என்றார் அவர்.
தமிழ் சார்ந்த சமூக நிகழ்ச்சிகளில் அதிகம் நாட்டம் கொண்ட தமது தாயாரின் வழியில், சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினராகவும் இந்த இளையர் தொண்டாற்றுகிறார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல், ஆய்வு மூன்றாம் ஆண்டு மாணவரான ஆதர்ஷ், நிதியியல், வர்த்தக நிர்வாகம் குறித்த கூடுதல் படிப்பையும் மேற்கொள்கிறார். ‘கவ்டெக்’ உபகாரச் சம்பளம் அடுத்த ஈராண்டுகளுக்கான அவருடைய கல்விச் செலவை வழங்கும். படிப்பு முடிந்ததும் ‘கவ்டெக்’கில் அவர் குறைந்தது ஈராண்டுகள் பணியாற்றுவார்.
பலதரப்பட்ட அனுபவம்
உயர்நிலைப் பள்ளியில் குடும்ப வரவுசெலவுக் கணக்குகளை ‘எக்செல்’லில் தொகுப்பதில் தொடங்கிய தொழில்நுட்பப் பயணம் பல்கலைக்கழகத்தில் விரிவடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024ஆம் ஆண்டு மூன்று மாதம் ஜகார்த்தாவில் ‘கோடிரேட்’ (GoTrade) எனும் பங்கு வர்த்தக நிறுவனத்தில் வேலைப்பயிற்சி மேற்கொண்டபோது ‘ஹேக்ஜகர்த்தா’ (HackJakarta) போட்டியிலும் பங்கேற்றார் ஆதர்ஷ். கிரேப் தளத்தில் அவசர மருத்துவ வண்டிகளை இணைப்பதை அவருடைய குழு பரிந்துரைத்து, இரண்டாம் நிலையைப் பிடித்தது.
“ஜகார்த்தாவின் போக்குவரத்து நெரிசலால் மருத்துவ வாகனங்கள் அடிக்கடி தாமதமடைவதை நாங்கள் கண்டோம். அவசர மருத்துவ வாகனங்களையும் கிரேப் வாடகைச் சேவைத் தளத்தில் இணைத்தால் மற்ற கிரேப் வண்டிகளை வழிவிடும்படி முன்கூட்டியே அறிவிக்கலாம்,” என்றார் ஆதர்ஷ்.
மருத்துவக் காப்பீடு செல்லுபடியாகும் அருகிலுள்ள மருந்தகங்களைக் கண்டுபிடிக்க மக்களுக்கு உதவ ‘டெலிகிராம்’ சேட்போட்டையும் மருத்துவர் கையெழுத்தை அடையாளங்கண்டு கணினி எழுத்துகளாக மாற்றும் தளத்தையும் உருவாக்கியுள்ளார் ஆதர்ஷ்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துக்காகவும் ஒரு சேட்போட் செய்துள்ளார்.
தற்போது பாரிசில் கல்வி நிறுவனம் ஒன்றில் வேலைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கும் ஆதர்ஷ், சிங்கப்பூர் ஆயுதப்படையில் மின்னல் படைத் தலைவராகவும் இருந்தவர்.
மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தில் (பிசிஎஃப்) தமிழ்ப் பாடத்திட்ட வல்லுநராக இருக்கும் அவருடைய தாயார், சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியில் பற்றை விதைத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் சிங்கப்பூருக்கு வந்தபோது பலரிடத்திலும் தமிழ்மொழி, பண்பாடு மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதைக் கண்டு தன் நண்பர் கார்த்திகேயனுடன் ‘ஸ்டைல் சங்கம்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கினார் ஆதர்ஷ்.
இயற்பியல் நாட்டத்துக்குப் பரிசு
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) வழங்கும் ‘எஸ்ஜி டிஜிட்டல்’ உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிக்கும் விஷால் மொஹண்த்தி, 22. நான்காண்டுப் படிப்புக்குப் பிறகு முதுநிலைப் பட்டத்தைப் பெறுவார் விஷால்.
“மழை, வானவில் போன்றவற்றின் காரணங்களை அறிவதில் சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. என்யுஎஸ் ஹை பள்ளியில் இயற்பியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. என்றாலும், கற்றதைக் கொண்டு நிஜ உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கேள்வி எப்போதும் இருக்கும்,” என்றார் விஷால்.
சென்ற ஆண்டு குவான்டம் தொழில்நுட்ப நிலையத்தில் வேலைப்பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. நவீன குவான்டம் தொழில்நுட்பங்களால் செய்யக்கூடியவற்றை அவர் அறிந்தார். “அப்போதுதான் இயற்பியல் ஆர்வத்தையும் சமூகம் மீதான அக்கறையையும் இணைக்க முடியும் என உணர்ந்தேன்,” என்றார் விஷால்.
பள்ளிக் கல்வியில் மேற்கொண்ட ஓராண்டு ஆராய்ச்சித் திட்டம் வழி சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மேற்பார்வையாளரின் வழிகாட்டுதலில் கணக்கீட்டு வேதியியலில் அனுபவமும் பெற்றார் விஷால்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது மைண்ட்ஸ் சார்ந்த சிறப்புத் தேவையுடையவர்களால் வழக்கம்போல் சாலையைக் கடக்க முடியவில்லை. அவர்களுக்காக இணையத்திலேயே சாலைப் போக்குவரத்தை மாதிரிப்படுத்தும் பாவனைத் தளத்தை அவருடைய குழு உருவாக்கியது.
சுற்றுப்புறத்துக்கு ஏதுவான மூலப்பொருள்களைத் தயாரிப்பதிலும் குவான்டம் ஆராய்ச்சி உதவும் என்றார் விஷாலுக்கு எதிர்காலத்தில் குவான்டம் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் இலக்கும் உண்டு.

