புதிய உச்சங்களை நோக்கி இளம் கலைஞர்கள்

புதிய உச்சங்களை நோக்கி இளம் கலைஞர்கள்

4 mins read
9e29cf4d-28dc-4920-829d-9b22bf03569d
கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் வழங்கும் விருதை பெறும் நிக்கலஸ் ரே மார்ட்டின். - படம்: தேசிய கலை மன்றம்
Google News Preferred Icon

சிறுவயதிலிருந்தே எப்பொழுதும் இசையால் நிரம்பிய வீட்டில் நிக்கலஸ் ரே மார்ட்டின் வளர்ந்தார். தாய்வழியில் சிங்கப்பூர் இந்திய மரபும், தந்தைவழியில் ஆங்கிலோ-இந்திய, யூரேசிய மரபும் கொண்டவர்.

“அப்பா கித்தார் வாசிப்பார். அம்மா வீட்டிலும் தேவாலயத்திலும் பாடுவார். அதனால், சிறுவயதில் இருந்தே இசை என் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தது,” என்று நிக்கலஸ், 23, குறிப்பிட்டார்.

நிக்கலஸ் ரே மார்ட்டின், 23.
நிக்கலஸ் ரே மார்ட்டின், 23. - படம்: தேசிய கலை மன்றம்

இசையின்மீது அவருக்கு இருந்த ஈடுபாடு, அவரின் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு சிரமமான அனுபவத்தால் மேலும் ஆழமானது. 2007ஆம் ஆண்டில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதற்கு சிகிச்சை பெற்ற காலத்தில் இசை அவருக்கு உற்ற துணையாக இருந்தது. அவர் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், பெரும்பாலும் பெரிய கூட்டங்களில் பாடத் தொடங்கினார்.

“அந்தத் தருணங்கள் நம்பிக்கை, ஒன்றிணைதல், மேலும் என்னைவிடப் பெரிய கதையைப் பகிர்வது பற்றியதாக இருந்தன. அப்போதுதான் மேடை இசை நிகழ்ச்சிகளின் மீதான எனது உண்மையான ஆர்வத்தை அறிந்தேன்.

“எதை எதிர்கொண்டாலும், இந்த ஆர்வம் எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார் அவர்.

நிக்கலஸ் 2009ஆம் ஆண்டில் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்து, தற்போது ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

அவர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் அவரை ராப் இசைக்கு அறிமுகப்படுத்தினார். ‘எமினெம்’, ‘டுபேக்’, ‘ஜே. கோல்’, ‘கெண்ட்ரிக் லமார்’ போன்ற மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள், அந்த இசை வடிவத்தின் கலைநயத்தை அவருக்குக் காட்டின.

நிக்கலஸ் பாடல்கள் எழுதத் தொடங்கி, தனது கைப்பேசியில் அவற்றைப் பதிவுசெய்து, ஒலி உற்பத்தியின் நுட்பங்களை ஆராயத் தொடங்கினார்.

சிங்கப்பூரில் அதிகம் பரவலாக அறியப்படாத ‘அண்டர்கிரவுண்ட்’ இசையை பிரபலப்படுத்துவதற்காக, அவர் தனது நண்பருடன் இணைந்து தொடங்கிய ‘ஜி.எல்.வி. என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

“வளங்கள் இல்லாத சிறிய தீவான சிங்கப்பூர், தனது வாய்ப்புகளைத் தானே உருவாக்கி இன்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது. அதுபோலவே, உள்ளூர் இசையை உலக மேடையில் உயர்த்த, நாமே வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்,” என்று அவர் கூறினார்.

நிக்கலசின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி ‘ரிவாம்ப்’, உள்ளூர், அக்கம்பக்கத் திறமைகளை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. இந்த அனுபவம், குழுப்பணி, திட்டமிடுதல், மன அழுத்தத்திலும் நிதானமாகச் செயல்படுதல் ஆகியவற்றைப் பற்றி அவருக்குக் கற்றுத்தந்தன.

தேசிய கலைகள் மன்றத்தின் புதிய பட்டயக்கல்வி (டிப்ளமோ) பிரிவு கலை உபகாரச் சம்பளம் பெற்ற 27 பேரில் நிக்கலஸும் ஒருவர். அவர் லாசால் கலைக் கல்லூரியில் ஒலித் துறை சார்ந்த பட்டயக்கல்வியை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த உபகாரச் சம்பளம் எனக்கு வெறும் நிதி உதவி அல்ல. அது மற்றவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமும் ஆகும்,” என்றார் அவர். “உள்ளூர் திறமைகளை வளர்த்து, அவற்றை அனைத்துலக அளவில் அறிமுகப்படுத்தும் ஒரு மேடையை உருவாக்குவதே நிக்கலஸின் கனவு.

இந்த ஆண்டு, தேசிய கலை மன்றமும் தேசிய மரபுடைமைக் கழகமும் இணைந்து மொத்தம் 46 பேருக்கு கலை, மரபுடைமைத் துறைகளில் படிக்க உபகாரச் சம்பளங்களை வழங்கியுள்ளன. கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதுடன், அடுத்த தலைமுறை கலை, கலாசாரத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் 1992ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த உபகாரச் சம்பளத்தை இந்த ஆண்டு ஆக அதிகமானோர் பெற்றனர்.

கலைத்துறையை வளமாக்க இலக்கு

விருதுபெற்ற மற்றொருவரான ஏஷுவா இம்ரான், 39, லண்டன், ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்டில் மின்னிலக்க இயக்கத் துறையில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள உள்ளார்.

ஏஷுவா இம்ரான், 39.
ஏஷுவா இம்ரான், 39. - படம்: தேசிய கலை மன்றம்

ஏஷுவா 2014ஆம் ஆண்டில் நிறுவிய ‘மியுரல் லிங்கோ’ நிறுவனம், தற்போது கலை, தொழில்நுட்பம், நிலைத்தன்மையை ஒருங்கிணைக்கும் ஒரு புதுமையான கலை ஸ்டூடியோவாக உருவெடுத்துள்ளது.

“மிகப் பெரிய இருவழித் தொடர்புடைய நிறுவல்களை நேரில் காணும்போது, அவற்றின் சக்தியை நான் உணர்ந்தேன். ‘சிங்கப்பூரில் ஏன் இத்தகைய புதுமையான கலைப் படைப்புகள் இல்லை?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்விதான் இன்றும் என்னை முன்னோக்கி நகர்த்துகிறது,” என்று ஏஷுவா தெரிவித்தார்.

இந்த உபகாரச் சம்பளம், சிங்கப்பூரின் ‘படைப்புச் சார்ந்த தொழில்நுட்பத்’ திறன்களை உலக அளவில் வெளிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கவும், புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும், அவரது தொழில்சார்ந்த பார்வையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும் என்றார் அவர்.

கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் வழங்கும் விருதை பெறும் ஏஷுவா.
கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் வழங்கும் விருதை பெறும் ஏஷுவா. - படம்: தேசிய கலை மன்றம்

ஏஷுவாவின் நீண்டகால இலக்கு சிங்கப்பூரில் ‘படைப்பு-தொழில்நுட்ப’ கலைக்கு தகுந்த சூழலை உருவாக்குவதுதான்.

“உள்ளூர் மக்கள் முழுமையாக ஈடுபடக்கூடிய படைப்புகளைத் திட்டமிட்டு, வடிவமைத்து, தயாரிக்க உதவும் ஒரு வழிமுறையை உருவாக்க விரும்புகிறேன். இதன்வழி அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் சிங்கப்பூரில் கலையால் வளமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவார்கள்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்