பேங்காக்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக முன்னர் கூறிய போதிலும், தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கம்போடியாவிற்கு எதிரான தனது நாட்டின் ராணுவ நடவடிக்கையைத் தொடருவதாக உறுதியளித்துள்ளார்.
காலனித்துவக் காலத்தின்போது வகுக்கப்பட்ட 800 கிலோமீட்டர் எல்லைப் பகுதியில் நீண்டகால சர்ச்சையால் இருநாடுகளிலும் கிட்டத்தட்ட அரை மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
சண்டையை மீண்டும் தூண்டியதாக ஒரு நாடு மற்றொன்றைக் குறைகூறிவருகிறது.
இந்நிலையில், தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல்லுடனும் கம்போடியப் பிரதமர் ஹுன் மனாட்டுடனும் நல்ல உரையாடல் நடைபெற்றதாகத் திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷியல் தளத்தில் குறிப்பிட்டார்.
இருதரப்பும் சனிக்கிழமை (டிசம்பர் 13) மாலையிலிருந்து எல்லா துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் உதவியுடன் தம்முடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டுக்குத் திரும்ப தாய்லாந்து, கம்போடியப் பிரதமர்கள் சம்மதித்ததாகவும் திரு டிரம்ப் சொன்னார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதியைக் கடைப்பிடித்து அமெரிக்காவுடனான வர்த்தகத்தைத் தொடர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
திரு டிரம்ப்புடன் உரையாடிய பிறகு பேசிய தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் அனுட்டின், சண்டைநிறுத்தத்தை உலகத்துக்கு அறிவிப்பது அவசியம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அமைதி உடன்பாட்டை மீறிய தரப்புதான் அதைச் சரிசெய்யவேண்டுமே தவிர அதனால் பாதிக்கப்பட்ட தரப்பு அல்ல என்றும் கூறிய அவர், திரு டிரம்ப்புடன் நல்ல முறையில் உரையாடியதைப் பகிர்ந்துகொண்டார்.
இதற்கிடையே, சண்டைநிறுத்தத்துக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகத் திரு டிரம்ப் கூறியிருந்தபோதும் தாய்லாந்தின் தாக்குதல் தொடர்வதாகக் கம்போடியா சனிக்கிழமை (டிசம்பர் 13) சொன்னது.
தாய்லாந்து ராணுவம் இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள் மூலம் ஏழு குண்டுகளை வெவ்வேறு பகுதிகளில் போட்டதாகக் கம்போடியத் தற்காப்பு அமைச்சு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
“தாய்லாந்துப் போர் விமானங்கள் வெடிகுண்டுத் தாக்குதல்களை இன்னமும் நிறுத்தவில்லை,” என்று அது சொன்னது.
இந்நிலையில், தாய்லாந்துப் பிரதமர் அனுடின் சார்ன்விராக்குல் கம்போடியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என்று சூளுரைத்துள்ளார்.
“கம்போடிய மக்களுக்கும் நிலத்துக்கும் எந்தவொரு தீங்கும் நேராது என்று உணரும்வரை தாய்லாந்தின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும்,” என்று திரு அனுடின் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
ஆசியானுக்குத் தலைமைத்தாங்கும் மலேசியாவுடன் அமெரிக்காவும் சீனாவும் ஜூலை மாதத்தில் சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்ட முயன்றன.
அக்டோபரில், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த உடன்பாட்டுக்குத் திரு டிரம்ப் ஆதரவளித்தார். இருதரப்பும் சண்டைநிறுத்தத்தைத் தொடர்ந்தால் புதிய வர்த்தக உடன்பாடுகள் எட்டப்படும் என்றார் அவர்.
ஆனால் தாய்லாந்து நவம்பர் மாதத்தில் உடன்பாட்டைக் கைவிட்டது.
இந்நிலையில், டிசம்பர் 13 இரவு முதல் தாய்லாந்தும் கம்போடியாவும் அனைத்து வகையான விரோதங்களையும் நிறுத்துமாறு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

