முடிவுக்கு வந்தது தாய்லாந்து - கம்போடியப் போர்

சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 1 மணி முதல் நடப்புக்கு வந்த அமைதி ஒப்பந்தம்

முடிவுக்கு வந்தது தாய்லாந்து - கம்போடியப் போர்

2 mins read
2c4b289c-670e-4c3a-a0e9-c0a3018d6413
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் அண்மையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் அச்சமுற்ற மக்கள் கம்போடியாவிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

தாய்லாந்தும் கம்போடியாவும் சனிக்கிழமை (டிசம்பர் 27) உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

தாய்லாந்து நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் (சிங்கப்பூரில் பிற்பகல் 1 மணி) நடப்புக்கு வந்த இந்தச் சண்டை நிறுத்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவ்விரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் சனிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என்றும் இந்த ஒப்பந்தம் கூறியுள்ளது. அவ்வட்டாரத்தை உலுக்கிய தொடர்த் தாக்குதல்கள் இதனால் முடிவுக்கு வந்துள்ளன.

வரவிருக்கும் புதிய ஆண்டில் அமைதியை நோக்கிச் செல்ல இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதால், நிம்மதி நிறைந்த நாள்களைக் காணலாம் என்று இருதரப்பு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

இந்த ஒப்பந்தத்தின் கீழ், போர்நிறுத்தம் 72 மணி நேரம் நீடித்தால் ஜூலை மாதத்திலிருந்து தாய்லாந்து பிடித்துவைத்துள்ள 18 கம்போடிய வீரர்களை அந்நாடு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்பந்தம் கோரியது.

சீனா மற்றும் அமெரிக்காவின் அரசதந்திர நடவடிக்கைகள், மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே மூன்று நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அண்மைய போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கம்போடியாவின் உயர்மட்ட அரசதந்தர அதிகாரி பிரக் சோகோன் மற்றும் தாய்லாந்து அரசதந்திர அதிகாரி ஹாசக் புவாங்கெட்கியோவ் ஆகியோர் டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து எல்லையில் நிலவும் சூழல்குறித்து குறித்து விவாதிக்க உள்ளனர். இத்தகவலை கம்போடிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையே நெடுங்காலமாக நீடித்து வந்த எல்லைப் பூசல் டிசம்பர் மாதத்தில் மீண்டும் தீவிரமடைந்தது நினைவிருக்கலாம்.

இதனால் ஏறத்தாழ 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் போரில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இரு நாடுகளின் அமைதியைக் குலைத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்த எல்லைப் பிரச்சினைக்கு தாய்லாந்து, கம்போடியா என இருதரப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வந்துள்ள நிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியப் பிறகு இதுவரை இருதரப்பும் எவ்வகை தாக்குதலிலும் ஈடுபடாததை கம்போடிய, தாய்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்