கொம்பாக் பள்ளி நச்சுணவு: இருவர் உயிரிழப்பு

1 mins read
b700ca43-8f44-431a-a491-0a282f152011
பள்ளியில் விற்கப்பட்ட உணவைச் சாப்பிட்டோர் காய்ச்சலுடன் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதியுற்றனர். - படம்: இணையம்

கொம்பாக்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் கொம்பாக் மாவட்டத்தில் நச்சுணவு காரணமாக இருவர் மாண்டனர். உயிரிழந்த 17 வயது சிறுவனும் 2 வயது சிறுமியும் அங்குள்ள பள்ளி ஒன்றில் விற்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தாயார் ஜூன் 8ஆம் தேதியன்று அந்தப் பள்ளியிலிருந்து உணவு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதை அந்தச் சிறுவனும் அவரது பெற்றோரும் சாப்பிட்டதும் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, ஜூன் 10ஆம் தேதியன்று அச்சிறுவன் சுயநினைவு இழந்தார்.

அவர் மாண்டுவிட்டதாக கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதே பள்ளியில் விற்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்பள்ளியில் பாதுகாவலராகப் பணிபுரியும் சிறுமியின் தந்தை, ஜூன் 8ஆம் தேதியன்று அங்கிருந்து உணவு வாங்கி வீடு திரும்பினார். அதை அச்சிறுமி சாப்பிட்டார்.

ஜூன் 10ஆம் தேதியன்று சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

அத்துடன், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவர் அவதியுற்றார்.

சிலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மரணங்கள் குறித்து மலேசிய சுகாதார அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நச்சுணவு காரணமாக சிறுவனும் சிறுமியும் மாண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்