பிரிட்டனில் அதிவேகத்தில் குறையும் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள்

பிரிட்டனில் அதிவேகத்தில் குறையும் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள்

2 mins read
5155db94-73cf-427a-98df-b50c351f5e2b
பிரிட்டனில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் ஆண்டு அடிப்படையில் 30.2 விழுக்காடு குறைந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டனில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள், மற்றவர்களுக்கானவற்றுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு வேகத்தில் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருங்காலத்துக்கான ஊழியரணிகளை உருவாக்குவதில் நிறுவனங்கள் போதுமான முதலீடு செய்யாமல் இருக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டனில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் ஆண்டு அடிப்படையில் 30.2 விழுக்காடு குறைந்தது. வேலை தேடலுக்கான அட்ஸுனா எனும் தளம், புளூம்பர்க் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய புள்ளி விவரங்களில் இத்தகவல் தெரியவந்தது.

ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் வேலை வாய்ப்புகள் 15.1 விழுக்காடு குறைந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட சரிவு கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைவது, ஊழியர் சந்தை சவால்களை எதிர்நோக்குவதன் அறிகுறியாகும். சென்ற ஆண்டு பொருளியல் சுருங்கியதைத் தொடர்ந்து நிறுவனங்கள் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதைக் குறைத்துக்கொண்டன.

நிலைமையைக் கையாள பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பணவீக்கத்துக்கு வழிவிடும் அம்சங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அந்த வகையில் 16 ஆண்டுகளில் காணப்படாத அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அந்நடவடிக்கை, அதிவேகமாக சம்பளம் அதிகரிப்பதால் ஏற்படும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உதவியது.

பிரிட்டனில் புதிய ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து ஐந்தாவது மாதமாகக் குறைந்தது என்று ஆர்இசி நிறுவனம் நடத்திய மற்றொரு கருத்தாய்வில் தெரியவந்தது. புதிய ஊழியர்களுக்கான தேவை கிட்டத்தட்ட 37 மாதங்களில் காணப்படாத அளவில் சரிந்ததாக அக்கருத்தாய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

ஆண்டு அடிப்படையில் சராசரியாக மூன்று விழுக்காடு சம்பள உயர்வு பதிவானது. அந்த விகிதம், மூன்றாண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு தேவையான ஊழியர்களை ஈர்க்க நிறுவனங்கள் கணிசமான அளவில் சம்பளத்தை உயர்த்தின. ஆனால் இவ்வாண்டு நிறுவனங்கள் சம்பளத்தை அதிகம் உயர்த்தத் தயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்