காஸா மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கவில்லை: கனடா கண்டுபிடிப்பு

1 mins read
70065799-2b88-4126-a68e-d83eefd4148f
அல் அஹ்லி மருத்துவமனைத் தாக்குதலில் 471 பேர் உயிரிழந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஒட்டாவா: காஸாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை அக்டோபர் 17ஆம் தேதி தாக்கப்பட்டது. ஆனால் இதன் பின்னணியில் இஸ்ரேல் இல்லை என்று கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை கண்டுபிடித்து தெரியப்படுத்தியிருக்கிறது.

“கனடியப் படைகளின் புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட முறையில் அந்தத் தாக்குதல் குறித்து மேற்கொண்ட பகுப்பாய்வில், அல் அஹ்லி மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கவில்லை என்பதற்கான நம்பகமான தகவல் கிடைத்துள்ளது,” என்று கனடிய பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவித்தது.

காஸாவிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணை தவறாக மருத்துவமனையைத் தாக்கியிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தெரிய வருகிறது.

கனடாவின் கண்டுபிடிப்பு, ஃபிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் முடிவுகளுடன் ஒத்துப்போகிறது.

மருத்துவமனைக்கு அருகிலுள்ள கட்டடங்கள், மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஏவுகணை நோக்கி வந்த பாணி, மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு ஆகியவற்றை ஆராய்ந்த பிறகு இஸ்ரேல் தாக்கியிருக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்ததாக கனடா மேலும் தெரிவித்தது.

இஸ்ரேல்தான் இந்தத் தாக்குதலை நடத்தியது என்று காஸாவின் சுகாதார அமைச்சு குற்றம்சாட்டியிருந்தது.

ஆனால் போராளிகளின் தவறான ஏவுகணைத் தாக்குதலால் இது நேர்ந்துள்ளது என்று இஸ்ரேல் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்