சாபாவில் ஆறு மாணவர்களுக்கு எச்1என்1 காய்ச்சல்; பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது

சாபாவில் ஆறு மாணவர்களுக்கு எச்1என்1 காய்ச்சல்; பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது

2 mins read
7079cfb0-3bfe-4c32-8288-ce03946fad12
நிலைமை கவலைக்குரியதாக இல்லை என்று தெரிவித்த சாபா சுகாதார, மக்கள் நலன் அமைச்சர் ஃபிராங்கி பூன், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவே பள்ளி மூடப்படுவதாகக் கூறினார். படம்: கூகல் மேப்பிலிருந்து எடுக்கப்பட்டது -
Google News Preferred Icon

மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் ஆறு மாணவர்களுக்கு எச்1என்1 காய்ச்சல் தொற்றியுள்ளது. இதையடுத்து அவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எச்1என்1 காய்ச்சல் பள்ளியில் உள்ள மற்றவர்களுக்குப் பரவுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்று கோத்தா கினபாலு சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இதனால் எஸ்கே ஸ்டெல்லா மாரிஸ் தொடக்கப்பள்ளி நாளை (ஜனவரி 22) முதல் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை மூடப்படும்.

நிலைமை கவலைக்குரியதாக இல்லை என்று தெரிவித்த சாபா சுகாதார, மக்கள் நலன் அமைச்சர் ஃபிராங்கி பூன், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவே பள்ளி மூடப்படுவதாகக் கூறினார்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆறு பேருக்கு எச்1என்1 காய்ச்சல் தொற்றியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதுகுறித்து தமக்கு இப்போதுதான் தகவல் கிடைத்ததாகவும் கூடுதல் விவரங்களைத் தர முடியாது என்றும் அமைச்சர் பூன் தெரிவித்தார்.

எச்1என்1 காய்ச்சல் தொற்று பலருக்குப் பரவவில்லை என்றார் அவர்.

மேலும், சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில் இந்த நோயால் பலர் பாதிக்கப்படுவதை அமைச்சு விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். ஏற்கேனவே மிக மோசமான உடல்நிலைப் பிரச்சினைகள் இருந்தாலொழிய அவர்களது உயிர்களுக்கு ஆபத்தில்லை. இந்த ஆறு மாணவர்களுக்கும் தற்போது ஓய்வு தேவை.

"அவர்களது தங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், முகக் கவசம் அணிந்துகொள்வது அவசியம்," என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு தெரிவித்தார் அமைச்சர் பூன்.

சாபாவில் எச்1என்1 காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்துக்கான பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் இருக்கிறதா என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

"அதற்குப் பதலளித்த அமைச்சர் பூன், தடுப்பூசி மருந்துக்கான பற்றாக்குறை ஏற்பட்டால் பலருக்கு நோய் தொற்றிவிட்டதாக ஆகிவிடும் என்று கூறினார்.

"அந்த நிலைமை ஏற்படவில்லை என்றும் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

"எச்1என்1 காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து தொடர்ந்து சாபாவுக்குக் கொண்டு வரப்படுகிறது," என்றார் அவர்.

#தமிழ்முரசு #எச்1என்1 #சாபா #மாணவர்கள் #எஸ்கேஸ்டெல்லாமாரிஸ்

குறிப்புச் சொற்கள்
காய்ச்சல்மாணவர்