அம்பெய்தி நாயைக் காயப்படுத்தியவர் சிறையில் அடைப்பு

அம்பெய்தி நாயைக் காயப்படுத்தியவர் சிறையில் அடைப்பு

1 mins read
கோழிகளைக் கொன்றதால் பழிவாங்கினார்
e7a9c4a7-33c3-4009-80d4-d944bac7c592
சியோஞ்சி எனப் பெயரிட்ட இந்த நாயை அமெரிக்கப் பெண் ஒருவர் தத்தெடுத்துக்கொண்டார். - படம்: தி கொரியா ஹெரால்டு
Google News Preferred Icon

ஜேஜு: அம்பெய்தி தெருநாயைக் காயப்படுத்திய ஆடவருக்குத் தென்கொரிய நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (மார்ச் 14) பத்து மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

ஜேஜூ தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த ஆடவர், கடந்த 2022 ஆகஸ்ட் 25ஆம் தேதி இக்குற்றச் செயலைப் புரிந்தார்.

கடந்த காலத்தில் தனது கோழிகளை அந்த நாய் கடித்துக் கொன்றுவிட்டதால், அதற்குப் பழிவாங்கும் வகையில் அவ்வாறு செய்ததாக அந்த ஆடவர் கூறினார்.

முதுகில் அம்பு பாய்ந்த நிலையில் அந்த ஆண் நாய் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் இணையம் வழியாக 20 அம்புகளை வாங்கினார் அந்த ஆடவர். பின்னர் மரக்கழியையும் மீன்பிடிக் கம்பியையும் கொண்டு, அவரே சொந்தமாக ஒரு வில்லைச் செய்தார்.

தான் விட்ட அம்பு அந்த நாயைத் தாக்கும் என நினைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார், 40 வயதுகளில் இருக்கும் அந்த ஆடவர்.

அம்பு பாய்ந்த அந்த நாய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சியோஞ்சி எனப் பெயரிடப்பட்ட அதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தத்தெடுத்து, சென்ற ஆண்டு நவம்பரில் நியூயார்க்கிற்குக் கொண்டுசென்றுவிட்டார்.

குறிப்புச் சொற்கள்