போர்க்களத்தில் களமிறங்கி கடனை அடைத்தவர் உயிருடன் திரும்பவில்லை

போர்க்களத்தில் களமிறங்கி கடனை அடைத்தவர் உயிருடன் திரும்பவில்லை

1 mins read
7b3894e0-5f76-409e-bbb3-c4bf5b74d122
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் தொடரும் நிலையில், அங்குள்ள பல இடங்களில் உயிர்ச்சேதத்துடன் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

காத்மாண்டு: நேப்பாளத்தின் ரவுத்தஹாட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயது திரு மான் பஹதூர் தமாங், கடன் சுமை காரணமாக வருமானம் தேடி ரஷ்யாவுக்குச் சென்றார்.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு அவர் தமது கிராமத்தில் கோழிப் பண்ணை வைத்திருந்தார்.

வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனது.

வட்டியுடன் சேர்த்து கடன் தொகை 25 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.

எனவே, வெளிநாடு சென்று பணம் ஈட்ட அவர் முடிவெடுத்தார்.

தமது மனைவியையும் ஐந்து வயது மகளையும் நேப்பாளத்தில் விட்டுவிட்டு ரஷ்யாவுக்குச் சென்றார் திரு தமாங்.

ரஷ்யா அடைந்ததும் அவர் அந்நாட்டின் ராணுவத்தில் சேர்ந்தார்.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போரிட்டு வரும் நிலையில், திரு தமாங் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டார்.

ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு அதன் மூலம் கிடைத்த சம்பளத்தைத் தமது மனைவிக்குத் திரு தமாங் அனுப்பிவைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் கடன்களில் பெரும்பாலானவற்றை அவர் அடைத்தார்.

இந்நிலையில், திரு தமாங் போரில் மாண்டுவிட்டதாக அவரது மனைவிக்குச் செய்தி அனுப்பிவைக்கப்பட்டது.

பிப்ரவரி 10ஆம் தேதியன்று ஆளில்லா வானூர்தி தாக்குதலில் திரு தமாங் உயிரிழந்ததாக அவருடன் முன்பு ரஷ்ய ராணுவத்தில் சேவையாற்றி மற்றொரு நேப்பாள நாட்டவரான திரு பிபாஷ் பங்கெனி தெரிவித்தார்.

திரு தமாங்கின் மரணம் அவரது குடும்பம் மட்டுமல்லாது அவரது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்