எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அணுமின் நிலையம் மீது தாக்குதல்

எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

2 mins read
74b4fa1f-9505-4016-9276-8541ffac3c2e
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் பரக்கா (Barakah) அணுமின் நிலையம் மீதான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் போர் நிறுத்தம் முடங்கியுள்ளதால், எண்ணெய் விலை இரண்டு வாரங்களில் அதிக உயர்வைக் கண்டுள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஈரான் போரை நிறுத்தும் முயற்சிகள் முடங்கியுள்ளதைத் தொடர்ந்து அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை (மே 18) கணிசமாக உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 1.86 விழுக்காடு உயர்ந்து ஒரு பீப்பாய் யுஎஸ் $111.29 ஆக விற்பனையானது. இது மே 5ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

அமெரிக்காவின் டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 2.19 விழுக்காடு உயர்ந்து ஒரு பீப்பாய் 107.73 டாலரை எட்டியது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த எடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், கடந்த வாரமே எண்ணெய் விலை 7 விழுக்காடுவரை உயர்ந்திருந்தது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அணுமின் நிலையம் தாக்கப்பட்டது, சவூதி அரேபிய வான்வெளியில் ஆளில்லா வானூர்திகள் (டிரோன்கள்) சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவங்கள் வட்டாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் சவூதியும் எச்சரித்துள்ளன.

இதற்கிடையே, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் செவ்வாய்க்கிழமை (மே 19) ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர் நீடித்தால், எண்ணெய் விலை தொடர்ந்து உயரும். இது உலகளாவிய வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாக வைத்திருக்கக்கூடும், மேலும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஆபத்தாக முடியும் என்று மதிப்புக்குரிய பொருளியல் நிபுணர் ஜேசன் ஷென்கர் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கான தடை விலக்கை நீட்டிக்க அமெரிக்கா மறுத்ததும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

புவிசார் அரசியல் சூழலால் ஆசியப் பங்குச்சந்தைகளும் திங்கட்கிழமை சரிவைக் கண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகம்எண்ணெய்விலைஏற்றம்அதிகரிப்புஈரான் போர்சவூதி அரேபியாஐக்கிய அரபு சிற்றரசுகள்விலையேற்றம்அமெரிக்காஇந்தியாரஷ்யா