ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தட்டம்மைத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
தொற்று அபாயமிக்க தட்டம்மையால் பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தட்டம்மைப் பரவல் அதிகமுள்ள 14 மாநிலங்களில் தடுப்பூசி நடவடிக்கை இடம்பெறும் என்று சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் ஆண்டி சாகுன் தெரிவித்தார்.
“14 மாநிலங்களிலும் மருத்துவர்கள், மற்றச் சுகாதாரப் பணியாளர்கள் என 290,000க்கும் மேற்பட்டோர்க்குத் தடுப்பூசி போட இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
“இதுவரை 565 சுகாதாரப் பணியாளர்களுக்கு அத்தடுப்பூசி போடப்பட்டுள்ளது,” என்று செய்தியாளர்களிடம் திரு சாகுன் கூறினார்.
தட்டம்மை தொற்றாத அலது அதற்கான தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொள்ளாத சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தட்டம்மை தொற்றக்கூடிய அபாயம் அதிகமுள்ள முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் சுகாதார நிலையங்களில் அந்நோய்ப் பரவலைக் குறைக்கவும் இந்த இயக்கம் இலக்கு கொண்டுள்ளது.
குழந்தைப் பருவத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததை அடுத்து, கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்தே இந்தோனீசியாவில் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு மார்ச் 22ஆம் தேதி நிலவரப்படி, அங்கு 16,355 பேரைத் தட்டம்மை தொற்றியது என்றும் அவர்களில் 10 பேர் இறந்துவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பத்துப் பேரில் பயிற்சி மருத்துவர் ஒருவரும் அடங்குவார்.
மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அம்மருத்துவர்க்கு நோயாளி ஒருவரிடமிருந்து தட்டம்மை தொற்றியது.
அதன் காரணமாக மார்ச் 26ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார்.

