மேண்டல்சன் சர்ச்சை: பதவி விலக மறுக்கிறார் பிரிட்டி‌‌ஷ் பிரதமர்

மேண்டல்சன் சர்ச்சை: பதவி விலக மறுக்கிறார் பிரிட்டி‌‌ஷ் பிரதமர்

2 mins read
78f4f117-f0e9-4ff2-a843-126b829f1a42
பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கான பிரிட்டி‌‌ஷ் தூதராகத் திரு பீட்டர் மேண்டல்சன்னை நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இரண்டாம் மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகினார். திரு மேண்டல்சன், அமெரிக்காவின் காலஞ்சென்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. அதனால் அவரின் நியமனம் குறித்து சர்ச்சை மூண்டது.

ஆனால் திரு ஸ்டார்மரைப் பதவி விலகும்படி ஸ்காட்லாந்தின் தொழிற்கட்சித் தலைவர் அனாஸ் சர்வார் நெருக்குகிறார். இரண்டே நாளில் மூத்த அதிகாரிகள் இருவர் வெளியேறியிருப்பது, பிரிட்டி‌‌ஷ் பிரதமரின் முடிவெடுக்கும் திறன் குறித்தும் ஆட்சி செய்யும் ஆற்றல் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருப்பதாக அவர் சொன்னார்.

திரு ஸ்டார்மருக்கு நெருக்கமானவரான மோர்கன் மெக்ஸ்வீனி வெளியேறியதைத் தொடர்ந்து, தொடர்புத் துறைத் தலைவர் டிம் ஆலன் பதவி விலகியிருக்கிறார்.

திரு மேண்டல்சனை அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கும்படி ஆலோசனை கூறியதற்குப் பொறுப்பேற்று திரு மெக்ஸ்வீனி பதவி விலகினார்.

டௌனிங் ஸ்திரீட்டில் உள்ள தலைமைத்துவம் மாற வேண்டும் என்று திரு சர்வார் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அதற்கு டௌனிங் ஸ்திரீட் பேச்சாளர் பதில் தந்தார்.

“பிரிட்டி‌‌ஷ் மக்கள், மாற்றத்தைக் கொண்டுவர ஐந்தாண்டு அதிகாரத்தைத் திரு ஸ்டார்மருக்குக் கொடுத்துள்ளனர்,” என்றார் அவர்.

இந்நிலையில், எப்ஸ்டைன் மோசடியின் தொடர்பில் மன்னர் சார்ல்ஸ் முதன்முறையாகக் கருத்துக் கூறியிருக்கிறார். அவரின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-விண்ட்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் காவல்துறை பரிசீலித்து வருகிறது. இவ்வேளையில், காவல்துறைக்கு ஆதரவளிக்க பக்கிங்ஹாம் அரண்மனை தயாராய் இருப்பதாக மன்னர் சார்ல்ஸ் சொன்னார்.

“குறிப்பிட்ட புகார்களுக்குத் திரு மவுண்ட்பேட்டன் விண்ட்சர்தான் பதில் தரவேண்டும். தேம்ஸ் வேலி காவல்துறை அணுகினால், ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்,” என்று அரண்மனைப் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூர், ஹாங்காங், வியட்னாம் நாடுகளுக்குச் சென்ற பயண அறிக்கைகளையும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ரகசியத் தகவல்களையும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பகிர்ந்ததாகக் கூறப்படுவது பற்றிக் காவல்துறை விசாரித்து வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட எப்ஸ்டைன் கோப்புகளின் மின்னஞ்சல்கள் அவற்றைக் காட்டுவதுபோல் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்