கோலாலம்பூரில் ஏடிஎம் இயந்திரங்களைச் சேதப்படுத்திய ஆடவர் கைது

கோலாலம்பூரில் ஏடிஎம் இயந்திரங்களைச் சேதப்படுத்திய ஆடவர் கைது

2 mins read
e1d333d7-b8e4-4863-b449-5dd0e5140654
மொத்தம் 12 தானியங்கி வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாகப் புகார்கள் பதிவாயின. - படம்: செந்துல் காவல்துறை/ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜின்ஜாங் பகுதியில் ஏறத்தாழ 12 தானியங்கி வங்கி இயந்திரங்களைச் சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

பிப்ரவரி 16ஆம் தேதியன்று ஜின்ஜாங் சிலாத்தானில் உள்ள ஒரு வங்கியில் நான்கு தானியங்கி வங்கி இயந்திரங்களின் திரைகள் உடைக்கப்பட்டிருப்பதாகப் புகார் செய்யப்பட்டது என்று செந்துல் காவல்துறை அதிகாரியான உதவி ஆணையர் பஸ்ரி சகோனி தெரிவித்தார்.

“இதனால் ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய RM4,000 (S$1,294) என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதியன்று, ஜின்ஜாங் சிலாத்தானில் உள்ள மேலும் இரண்டு வங்கிகள் மற்றும் ஜின்ஜாங் உத்தாராவில் உள்ள இரண்டு வங்கிகளின் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகப் புகார்கள் பதிவாகின. அவற்றின்மூலம் ஏறத்தாழ RM60,000 இழப்பு ஏற்பட்டது,” என்று அவர் புதன்கிழமையன்று (பிப்ரவரி 18) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 12 தானியங்கி வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாகப் புகார்கள் பதிவாயின.

“சந்தேகப் பேர்வழி வங்கிக்குள் நுழைந்து, கல் என்று நம்பப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தி தானியங்கி வங்கி இயந்திரங்களின் திரைகளை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதைத் தனது பாணியாகக் கொண்டிருந்தார். இதுவரை இதில் வேறு எந்தக் குற்ற நோக்கமும் கண்டறியப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

தொடர்விசாரணையின் மூலம் புதன்கிழமையன்று செந்துல் பகுதியில் 67 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

“விசாரணையின்போது, தானியங்கி வங்கி இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முடியாததால் ஏற்பட்ட அதிருப்தியில் அவற்றின் திரைகளை உடைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரைக் கைதுசெய்ததன் மூலம், தானியங்கி வங்கி இயந்திரங்களில் திரை சேதப்படுத்தப்பட்டது தொடர்பான ஐந்து புகார்களுக்குக் காவல்துறையினர் தீர்வுகண்டுள்ளனர்,” என்று திரு சகோனி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்