தண்ணீர்ச் சிக்கனத்தில் கவனம் செலுத்தும் மலேசியர்கள்

தண்ணீர்ச் சிக்கனத்தில் கவனம் செலுத்தும் மலேசியர்கள்

2 mins read
5ad48f85-2c34-4b58-b00a-2f38836d883a
வாரந்தோறும் கார் கழுவிய நிலை மாறி மாதம் இருமுறை என்று ஆகிவிட்டதாகக் கார் கழுவும் நிலையங்கள் கூறின. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் நீடிக்கும் கடும் வெப்பம் காரணமாக மலேசியர்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்பம் காரணமாக நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை எழுந்துள்ளது. அதனால், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் நீரைப் பயன்படுத்தும் முறைகளை மலேசியர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

குறிப்பாக, அடிக்கடி கார் கழுவும் போக்கைக் கைவிட்டு தேவை ஏற்படும்போது மட்டும் கழுவும் பழக்கத்திற்கு அவர்கள் மாறி வருகின்றனர்.

கோலாலம்பூரின் தெற்கு நகரான சலாக் தெலானில் உள்ள கார் கழுவும் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதை அந்த நிலையத்தின் ஊழியர் த ஸ்டார் ஊடகத்திடம் கூறினார்.

முன்பு வாரந்தோறும் தங்கள் கார்களைக் கழுவி வந்த பெர்லிஸ், கெடா மற்றும் மலாக்காவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், இப்போது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வருவதாகக் கூறினார் அவாலுதீன் காசிம் என்னும் அந்த ஊழியர்.

“வழக்கமாக, வேலைக்காக ஒவ்வொரு வாரமும் எங்கள் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது அவர்களின் சொந்த ஊரில் வானிலை நிலவரம் மிகவும் வெப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

“அவர்கள் இந்நகருக்கு வந்து போனாலும், கார் கழுவுவது என்பது தற்போது அவர்களின் முன்னுரிமையாக இருக்கவில்லை. ஆனால், இந்த மாற்றம் வியப்புகுரியதல்ல.

இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவம் காரணமாக அவர்கள் தற்போது விழிப்புடன் நடந்துகொள்கிறார்கள்,” என்று கூறிய திரு அவாலுதீன், 2021 மார்ச் மாத நிலவரத்தை நினைவுகூர்ந்தார்.

“அப்போது தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சிறிய கார் கழுவும் தொழிலை நடத்துவதே பொறுமையையும் மனஉறுதியையும் சோதிப்பதாக இருந்தது,” என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், “தண்ணீர் பீய்ச்சும் குழாய்க்குப் பதில் வாளியைப் பயன்படுத்தி கார் கழுவினோம். அது மிகவும் மெதுவான, களைப்புக்குரிய பணியாக இருந்தபோதிலும் வேறு வழியின்றிச் செய்தோம்.

“வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதும் அவர்கள் மீண்டும் கார் கழுவ வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதும் எங்கள் கடமையாக இருந்தது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்