94 பாதுகாப்பு அம்சங்களுடன் மலேசியாவின் புதிய கடப்பிதழ்

ஜூன் 1 முதல் விநியோகம்

94 பாதுகாப்பு அம்சங்களுடன் மலேசியாவின் புதிய கடப்பிதழ்

2 mins read
777b6821-baca-46f8-8ae3-c2fc482c4954
மலேசியாவின் புதிய கடப்பிதழ் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் புற ஊதா அச்சு, சிறப்புப் பாதுகாப்பு நூலினால் ஆன தையல், முப்பரிமாணப் படிமம் (hologram) உள்ளிட்ட 94 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்
Google News Preferred Icon

புத்ராஜெயா: மலேசியா ஜூன் 1ஆம் தேதி முதல், 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய அனைத்துலகக் கடப்பிதழை வழங்கும் என அந்நாட்டுக் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில், புற ஊதா அச்சு, சிறப்புப் பாதுகாப்பு நூலினால் ஆன தையல், முப்பரிமாணப் படிமம் (hologram) உள்ளிட்டவை இடம்பெறும் என்று செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெற்ற குடிநுழைவுத்துறையின் சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜகாரியா குறிப்பிட்டார்.

போலி ஆவணங்கள் தயாரிப்பதைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் கிட்டத்தட்ட தற்போதுள்ளதைவிட இரு மடங்கு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கடப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கடப்பிதழ் 49 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது.

முதற்கட்டமாக ஜூன் 1ஆம் தேதி புத்ராஜெயா குடிநுழைவுத் தலைமையகம், கோலாலம்பூர் குடிநுழைவு அலுவலகம், வாங்சா மாஜு யுடிசி அலுவலகம், ஷா ஆலம் குடிநுழைவு அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் கடப்பிதழ் விநியோகம் தொடங்கும். ஜூலை இறுதிக்குள் அனைத்து கிளைகளிலும் புதிய கடப்பிதழ் விநியோகிக்கப்படும் என்று திரு ஜகாரியா தெரிவித்தார்.

தற்போதைய கடப்பிதழைச் செல்லுபடியாகும் காலம்வரை பயன்படுத்தலாம். எனவே, பொதுமக்கள் புதிய கடப்பிதழைப் பெற அவசரப்பட்டு குடிநுழைவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இணையம் வழி கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜகாரியா கூறினார். அத்தகைய புகைப்படங்களை அடையாளம் காணும் நிபுணத்துவத்தை அதிகாரிகள் பெற்றிருப்பதை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகடப்பிதழ்குடிநுழைவுஅதிகாரிபோலிமோசடிவிநியோகம்