தோக்கியோ: ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 2025ஆம் ஆண்டு அந்நாட்டில் 123 மில்லியன் மக்கள் இருந்தனர் என்று கணக்கிடப்பட்டது.
அந்த எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானிய மக்கள்தொகை 2.5 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதைக் காட்டுகிறது. ஜப்பானில் பத்து ஆண்டுகளுக்கு இருமுறை மக்கள்தொகை கணக்கிடப்படுகிறது. இந்த விவரங்கள் வெள்ளிக்கிழமை (மே 29) அரசாங்கத் தரவுகளில் வெளியிடப்பட்டன.
சரிந்துவரும் அதன் மக்கள் தொகையை நிலைநிறுத்த ஜப்பான் போராடி வருகிறது. உலகின் நான்காவது பெரிய பொருளியலைக் கொண்ட நாடான ஜப்பானில் கடைசியாக 2020ல் நடந்த கணக்கெடுப்பில் தற்போதைய எண்ணிக்கையை விட ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்கள் அதிகமாக இருந்தனர்.
1920ஆம் ஆண்டு தொடங்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைவிட 2025ல் எடுக்கப்பட்ட தரவுகள் ஆகக் குறைவான விகிதத்தைக் காட்டியுள்ளன. மேலும் 2015 முதல் 2020ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மக்கள்தொகை மூன்று மடங்கு குறைந்துள்ளதும் வெளிப்படையாகியுள்ளது.
“நாட்டில் மக்கள்தொகை வீழ்ச்சியடைவதை தரவுகள் உறுதிசெய்துள்ளன,” என மூத்த அரசாங்க அதிகாரி மினுரொ கிஹாரா செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.
முதியோரும் குழந்தை பிறப்பு விகிதமும்
மூப்படைந்த சமுதாயத்துடன், உலகின் ஆகக் குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து புதிய குடிமக்களை வரவேற்பதை ஒரு தீர்வாக சிலர் முன்வைத்தாலும் பிரதமர் சானேய் தக்காய்ச்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத் தரவுகளின்படி, 2025ல் பத்தாம் ஆண்டாக தொடர்ந்து குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 75,809 குழந்தைகள் ஜப்பானில் பிறந்தன.
மத்திய அரசாங்கமும் உள்ளாட்சி மன்றங்களும் ஒன்றிணைந்து திருமணங்களுக்கும் குழந்தை பிறப்புகளுக்கும் புதிய மானியங்கள், சலுகைகள், பொருத்தம் பார்க்கும் சேவை, பணி விடுப்புத் திட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியும் எதிர்பார்த்த வகையில் அதிக குழந்தைகள் ஜப்பானில் பிறக்கவில்லை.

