வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ்(ISIS) தீவிரவாத அமைப்பு சனிக்கிழமை (டிசம்பர் 13) நடத்திய தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்களும் ஒரு மொழிபெயர்ப்பாளரும் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் மேலும் மூன்று அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் எதிராக இந்தத் தாக்குதல் நடத்துள்ளது. சிரியாவின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத பயங்கரமான பகுதியில் இது நடந்துள்ளது. அதற்கான மிகத் தீவிர பதிலடி கொடுக்கப்படும்” என்று சம்பவம் பற்றி தமது சமூக ஊடகத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்டிமோர் நகரில் சனிக்கிழமை நடந்த பள்ளி விளையாட்டுப் போட்டிக்குச் செல்வதற்கு முன்பாக அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எவ்வித பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் விளக்கவில்லை.
ஒரு தனிநபராக தாக்குதலை மேற்கொண்ட ஐஎஸ் அமைப்பின் போராளி என அடையாளம் காணப்பட்ட ஆடவர், சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அமெரிக்க மத்திய ராணுவத் தளபத்தியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்மைரா நகரில் தீவிரவாதத்துக்கு எதிரான திட்டங்களில் அமெரிக்கா மற்றும் சிரியா நாடுகளின் ராணுவத்தினர் கூட்டாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவின் அதிபர் அஹமது அல்ஷராவின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி பல்மைரா ஆகும்.
கடந்த நவம்பர் மாதம் சிரிய அதிபர், திரு டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து, வர்த்தகத் தடைகளில் இருந்துமீள கூடுதல் உதவிகளையும் நிவாரணங்களையும் நாடியுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா அமைக்கும் கூட்டணியுடன் இணைந்து ஐஎஸ் அமைப்பை அழிக்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.
சிரியாவில் 1,000 அமெரிக்க ராணுவத்தினரும் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் அசாத் வெளியேற்றப்பட்ட பிறகு, குர்தியர்களின் தலைமையில் அந்நாட்டு ஜனநாயக சக்திகளுடன் ஒருங்கிணைந்து ஐஎஸ் அமைப்பின் ஆயுதக் குழுக்களை அமெரிக்கர்கள் வேட்டையாடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதலில் பலியானோரின் விவரங்களை அவர்களின் குடும்பங்களிடம் தெரிவிக்கும்வரையில் அமெரிக்கா வெளியிடவில்லை.

