டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்போவதில்லை என்று ஈரான் புதன்கிழமை (ஏப்ரல் 22) சூளுரைத்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு நீட்டிக்கப்பட்டபோதும் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடர்வதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் சொன்னது.
அமெரிக்க முற்றுகைக்கு மத்தியில் ஈரான் சரக்குக் கப்பல்களை கைப்பற்றியது
இதற்குமுன் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்துசெல்ல முற்பட்ட மூன்று சரக்குக் கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், நீரிணை வழியாகக் கடந்துசெல்ல முற்பட்ட இரண்டு சரக்குக் கப்பல்களையும் ஈரான் கைப்பற்றியிருப்பதை உறுதிப்படுத்தியது. போரை நிறுத்த ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு காலாவதியாவதற்குச் சில மணிநேரம் எஞ்சியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 21ஆம் தேதி காலவரையறையின்றி உடன்பாட்டை நீட்டிப்பதாக அறிவித்தார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்ய பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்பதாகச் சொன்ன ஈரான், திரு டிரம்ப்பின் அறிவிப்பு பற்றி கருத்துரைக்கவில்லை. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஈரானின் தலைமைப் பேச்சாளர் முகமது பாகெர் கலிபாஃப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க சாத்தியம் இல்லை என்று கூறினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் சண்டைநிறுத்த உடன்பாட்டை மீறியிருப்பதாக அவர் சாடினார். ஈரான் சமரசம் பேசத் தயாராக இருக்கிறது என்று அந்நாட்டு அதிபர் மசூட் பெசெஷ்கியன் தெரிவித்தார். ஆனால், உடன்பாட்டை அத்துமீறுவது, முற்றுகையிடுவது ஆகியவை உண்மையான சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பெருந்தடைகளாக உள்ளன என்றார் அவர். அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் இந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை இன்னும் தொடங்கவில்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானுடன் போரை முடித்துக்கொள்ள எந்தக் காலவரையறையும் இல்லை என்றார். நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டுக்குத் திரு டிரம்ப் எந்தக் காலக்கெடுவும் விதிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
கப்பல்கள் பறிமுதல்
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய்க்கான குறுகிய நுழைவாயிலான ஹோர்முஸ் நீரிணையிலிருந்து இரண்டு கப்பல்களை ஈரானியக் கரைக்கு வலுக்கட்டாயமாக வரவழைந்ததாக ஈரானின் உயர்மட்டப் புரட்சிக் காவலர் காவற்படை தெரிவித்தது.
“இன்று காலை ஹோர்முஸ் நீரிணையில், விதிகளை மீறிய இரண்டு கப்பல்களை இஸ்லாமியப் புரட்சிக் காவலர் கடற்படை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தியது,” என்று அந்தப் படையினர் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
பனாமா கொடியை ஏந்திய ‘எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா’ என்ற கொள்கலன் கப்பலும், லைபீரியா கொடியை ஏந்திய ‘எபமினோண்டாஸ்’ என்ற கப்பலும் அவை என அவர்கள் கூறினர்.

