பிரிட்டிஷ் மன்னருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உற்சாக வரவேற்பு

பிரிட்டிஷ் மன்னருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உற்சாக வரவேற்பு

2 mins read
‘இரு மன்னர்களின்’ சந்திப்பு என வெள்ளை மாளிகை நிகழ்வை வருணித்தது
9a8a5c9a-7952-4cbc-b0f8-c6dba0f7fadb
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்த இரவு விருந்துக்கு முன்னதாக மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடுகிறார். உடன் பிரிட்டிஷ் அரசியார் கமிலா. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் ஆகிய இருவரது சந்திப்பு வரலாற்றுப் பெருமைமிக்கதாக அமைந்தது.

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அமெரிக்காவுக்கு நான்கு நாள்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலானியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்ல்ஸ், அரசியார் கமிலாவை வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற அதிகாரபூர்வ விருந்தின்போது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆங்கிலேயர் - அமெரிக்கர் புரட்சி இன்றும் நிலைத்திருப்பதைக் கண்டு தமது முன்னோர்கள் பெருமைப்படுவர் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மன்னர் சார்ல்ஸும், அதிபர் டிரம்ப்பும் இடம்பெற்ற படத்தை ‘இரு மன்னர்கள்’ என்று குறிப்புடன் வெள்ளை மாளிகையின் எக்ஸ் தளம் வெளியிட்டது.

அது, டிரம்ப் எதிர்ப்பாளர்களிடம் சர்ச்சையைக் கிளப்பியது.

அதிபர் டிரம்ப் தமது இரண்டாவது பதவிக்காலத்தில், அண்மையில் தம்மை ஒரு மன்னரைப் போலச் சித்திரிக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காணொளிகளைப் பகிர்ந்ததை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

அமெரிக்காவில் மக்கள்தான் இறையாண்மை கொண்டவர்கள், அதிபருக்கு மன்னரைப் போன்ற அதிகாரம் கிடையாது என நியூயார்க் நகரின் ஜனநாயகக் கட்சியின் ஜோ மோரெல் அது குறித்து கருத்துரைத்தார்.

முன்னதாக, ஏப்ரல் 25 அன்று நடந்த ஒரு கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய அதிபர் டோனல்ட் டிரம்ப், தான் ஒரு மன்னர் அல்ல என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

விருந்து நிகழ்ச்சியின்போது ஈரான் விவகாரத்தைத் திரு டிரம்ப் முன்வைத்தார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை மன்னர் சார்ல்ஸும் எதிர்க்கிறார் என அவர் கூறியபோது, அவர் நேரடியாகப் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.

அதே சமயம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மன்னர் சார்ல்ஸ், நேட்டோ அமைப்புக்கான அமெரிக்க ஆதரவு, உக்ரேன் போரில் அமெரிக்காவின் உதவி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிர்வாக அதிகாரம் எப்போதும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்பதை வரலாற்று ஆவணங்களைச் சுட்டிக்காட்டி அவரது உரையில் மென்மையாக மன்னர் நினைவூட்டினார்.

நிச்சயமற்ற இந்தத் தருணத்தில், மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டியது அவசியம் என்று மன்னர் வலியுறுத்தினார்.

“இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா உதவாமல் இருந்திருந்தால், ஐரோப்பிய நாடுகள் ஜெர்மானிய மொழி பேசியிருக்கும்.

“நாங்கள் இருந்திருக்காவிட்டால் அமெரிக்கர்கள் இப்போது பிரெஞ்சு பேசிக்கொண்டிருப்பீர்கள்,” என்று மன்னர் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

மன்னர் சார்ல்ஸ், அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாம் உலகப் போர்க் காலத்து நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த மணியைப் பரிசாக வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்