காற்பந்தாட்டக் கலவரம்: 14 பேரைத் தடுத்துவைத்தது இந்தோனீசியக் காவல்துறை

காற்பந்தாட்டக் கலவரம்: 14 பேரைத் தடுத்துவைத்தது இந்தோனீசியக் காவல்துறை

1 mins read
bac8ad71-bfcd-4096-b388-9798da3b05e9
பெர்ஸ்பிரா ஜெயபுரா குழு, சொந்த மண்ணில், பூஜ்ஜியத்திற்கு ஒன்று எனும் கோல் கணக்கில் பிஎஸ் ஆதியக்சா பேன்டன் குழுவிடம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. - படம்: ஜகார்த்தா போஸ்ட்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து 14 பேரைக் காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர்.

ஜெயபுரா வட்டாரத்தின் ஹரப்பான் கிராமத்தில் உள்ள லூக்கஸ் எனெம்பெ விளையாட்டரங்கில் நடந்த வன்செயலுக்குப் பிறகு அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.

2022ஆம் ஆண்டு கிழக்கு ஜாவாவின் மலாங் வட்டாரத்தில் உள்ள கஞ்சுருஹான் விளையாட்டரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டனர். அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் அதனை விசாரித்துவரும் நிலையில் அண்மைச் சம்பவம் நடந்துள்ளது.

பெர்ஸ்பிரா ஜெயபுரா குழு, வெள்ளிக்கிழமை (மே 8) சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில், பூஜ்ஜியத்திற்கு ஒன்று எனும் கோல் கணக்கில் பிஎஸ் ஆதியக்சா பேன்டன் குழுவிடம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.

பாப்புவா காவல்துறையின் தலைமைப் பேச்சாளர் சாஹ்யோ சுகார்னிட்டோ, 14 பேரை ஜெயபுரா காவல்துறையினர் விசாரிப்பதாகச் சொன்னார்.

“கலவரத்தில் சம்பந்தம் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்,” என்று தலைமைப் பேச்சாளர் கூறினார்.

தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, 67 வாகனங்களும் நான்கு கார்களும் தீ மூட்டிச் சேதப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் 10 பேரும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்