புதிய அலுவலகத்தில் முதல் நாள் பணி; மாற்றத்தை விரும்பும் பிரிட்டன் பிரதமர்

புதிய அலுவலகத்தில் முதல் நாள் பணி; மாற்றத்தை விரும்பும் பிரிட்டன் பிரதமர்

2 mins read
c0e6b9e3-da56-4463-975a-3ce749f040ad
பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மான்செஸ்டர்: பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மான்செஸ்டரில் அமைந்துள்ள புதிய பிரதமர் அலுவலகத்தில் தமது முதல் நாள் பணியைத் தொடங்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 24) புதிய அலுவலகத்தில் பொருளியல் தொடர்பாகவும் அவர் கூட்டத்தை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் மட்டும் அதிகாரம் இருக்கக்கூடாது அது நாட்டின் பிற வட்டாரங்களுக்கும் பரவ வேண்டும் என்பது பிரதமர் பர்ன்ஹாமின் நோக்கம். அதை எடுத்துக்காட்டும் விதமாகத் தற்போது மான்செஸ்டரில் உள்ள ‘எண் 10 நார்த்’ல் அவர் பணியைத் தொடங்கியுள்ளார்.

பிரதமருக்குத் துணையாக அமைச்சர்கள் லூசி பவெல், லூயிஸ் ஹேக் ஆகியோரும் புதிய அலுவலகத்தில் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 300 அரசாங்க ஊழியர்கள் அந்தப் புதிய அலுவலகத்தில் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள தேசியப் பொருளியல் மன்றக் கூட்டத்திற்கும் பிரதமர் பர்ன்ஹாம் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

மூத்த அமைச்சர்கள், வட்டார மேயர்களை ஒன்றிணைத்து பிரிட்டனை வளர்ச்சியின் பக்கம் கொண்டு செல்வதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

“கடந்த 40 ஆண்டுகளாக அதிகாரமும் வளங்களும் லண்டனிலேயே குவிக்கப்பட்டுவிட்டன. பல சமூகங்கள் மறக்கப்பட்டுவிட்டதாக உணர்கின்றன. அதிகாரம் மற்ற இடங்களுக்கும் பரவுவதை எதிர்க்கும் காலம் முடிந்துவிட்டது,” என்று பிரதமர் பர்ன்ஹாம் கூறினார்.

“வட்டாரப் பொருளியல் வளர்ச்சி தொடர்பான முக்கிய முடிவுகள் இனி புதிய அலுவலகத்திலிருந்து எடுக்கப்படும். தொழிற்துறைத் தலைவர்களுடனான சந்திப்பில் வளர்ச்சி, முதலீட்டைப் பெருக்குவது குறித்துப் பேசப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மதுபானக் கூடங்கள், இசைக் கூடங்கள் ஆகியவற்றுக்கு 20 விழுக்காடு வரி குறைப்பு உள்ளிட்ட பல திட்டங்களைத் திரு பர்ன்ஹாம் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதில் அவர் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் கெமி படேனோக், திரு பர்ன்ஹாம் இன்னும் மேயர் போல இயங்குவதாக விமர்சித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்