61 கத்திக்குத்துக் காயங்களுடன் மாணவி கொலை; நால்வர் கைது

61 கத்திக்குத்துக் காயங்களுடன் மாணவி கொலை; நால்வர் கைது

1 mins read
1e2aa392-ab1c-455f-bbb4-50587c801850
நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகம்மது யூசோஃப் மமட் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கோத்தா பாரு: மலேசியாவில் 19 வயது கல்லூரி மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இருவர், ஏழு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதர இரண்டு மூத்த குடிமக்கள் விசாரணையில் உதவ மூன்று நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்.

கம்போங் சிமா வயல்வெளிக்கு அருகே வெள்ளிக்கிழமை அன்று (மே 1) 61 கத்திக்குத்துக் காயங்களுடன் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் 19 வயதுள்ள இருவர், 66 வயது ஆண், 60 வயது பெண் ஆகியோருக்கு எதிராக நீதிபதி அமிருல் அஸிரஃப் அப்துல் ரஷீத் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

மே 2ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்தத் தடுப்புக் காவல் விசாரணைக்கு உதவும் என நம்பப்படுகிறது.

முன்னதாக நான்கு சந்தேக நபர்களும் காலை 8.40 மணியளவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய கைகள் விலங்கிடப்பட்டிருந்தன.

கிளந்தான் காவல்துறைத் தலைவரான முகம்மது யூசோஃப் மமட் வெள்ளிக்கிழமை, 61 கத்திக்குத்துக் காயங்களுடன் கல்லூரி மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதி செய்தார்.

பேராவைச் சேர்ந்த அந்த மாணவி வேறோர் இடத்தில் கொல்லப்பட்டு பின்னர் இங்குள்ள வயல்வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.

உடற்கூறாய்வில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டதால் 19 வயது மாணவிக்கு மரணம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 19 வயது இளையர் இருவர்.
கைது செய்யப்பட்ட 19 வயது இளையர் இருவர். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்