ஈரானின் பதில் தாக்குதலால் துபாய் விமான நிலையம் சேதம்

ஈரானின் பதில் தாக்குதலால் துபாய் விமான நிலையம் சேதம்

2 mins read
7dca949d-3c93-4983-8c1d-f0581f9504a8
துபாய் அனைத்துலக விமான நிலையம். - கோப்புப் படம்: செயற்கை நுண்ணறிவு / thetraveler.org/
Google News Preferred Icon

துபாய்: அமெரிக்க, இஸ்ரேலியத் தாக்குதலுக்கு ஈரான் இரவையும் தாண்டி நடத்திய பதில் தாக்குதல்களில் துபாய் அனைத்துலக விமான நிலையம், அந்நகரில் உள்ளப் பிரபல புர்ஜ் அல் அராப் ஹோட்டல் ஆகியவை சேதமடைந்தன.

அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையத்தில் நால்வர் காயமடைந்ததாக உள்ளூர் தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) தெரிவித்தன.

“துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் நடமாட்டப் பகுதியில் சிறிதளவு சேதம் ஏற்பட்டது. நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,” என்று துபாய் ஊடக அலுவலகம், எக்ஸ் தளத்தில் மேல்விவரம் ஏதும் தராமல் தெரிவித்தது.

வானூர்தி ஒன்று அடையாளம் கண்டு முடக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக உருவான சிதைவுகளால் புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் வெளிப்புறத்தில் சிறிய அளவிலான தீ மூண்டதாகவும் துபாய் ஊடக அலுவகம் குறிப்பிட்டது.

துபாய், மத்திய கிழக்கு வட்டாரத்தின் ஆகப் பெரிய சுற்றுப்பயண மற்றும் வர்த்தக மையமாக விளங்குகிறது. அதன் அனைத்துலக விமான நிலையம் உலகளவில் ஆக அதிகமான விமானப் பயணங்கள் இடம்பெறும் விமான நிலையங்ளில் ஒன்று.

புர்ஜ் அல் அராப் ஹோட்டல், துபாயில் கவனம் ஈர்க்கும் சின்னமாகப் பல காலமாக இருந்து வருகிறது. இரவைத் தாண்டி ஈரான் மேற்கொண்ட தாக்குதலால் துபாய் விமான நிலையத்தின் முனையங்களில் ஒன்று சேதமடைந்ததாக விமானத் துறையைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபுச் சிற்றரசு தலைநகர் அபுதாபியின் ஸாயெத் அனைத்துலக விமான நிலையத்தில், எழுவர் காயமடைந்ததாகவும் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மாண்டதாகவும் அபு தாபி விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இதற்கிடையே, தெற்கு ஈரானில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 108 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசாங்க வழக்கறிஞர் கூறினார் என்று பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது பெரிய அளவில் ஆகாயப் படைத் தாக்குதல்கள் நடத்தியதையொட்டி இச்சம்பவம் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்துபாய்ஈரான்வானூர்திசேதம்தாக்குதல்மத்திய கிழக்குஅமெரிக்காஇஸ்ரேல்