ஜோகூர்பாரு: மலேசிய எல்லைகளில் இயங்கும் கணினிகளில் வியாழக்கிழமை (மே 28) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
கணினிக் கட்டமைப்பு முழுவதும் காலை 4.30 மணிமுதல் 9.30 மணிவரை ஏறத்தாழ ஐந்து மணிநேரம் இயங்கவில்லை. உள்ளூர்வாசிகளையும் வெளிநாட்டினரையும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கணினியின் உதவியின்றி நேரடியாகக் கடப்பிதழ்களைச் சோதித்து சாவடிகளைக் கடக்கவைக்க வேண்டியிருந்தது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியும் இதேபோன்ற தொழில்நுட்பக் கோளாறு எல்லைச் சாவடிகளில் 2 மணிநேரம் ஏற்பட்டு பலரை அவதிக்குள்ளாக்கியது. ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட இடைவெளிக்குள் இரண்டாம் முறையாக இது நடந்துள்ளது.
“இயந்திரக் கோளாறு காலை 5 மணிக்கு ஏற்பட்டு காலை 8.45 மணிவரையில் நீடித்தது. மலேசியக் குடிநுழைவு செயல்பாட்டு கட்டமைப்பின் (MyIMMs) தரவு நிலையத்தில் நிகழ்ந்த தொழில்நுட்பப் பிரச்சினைகள் அதற்குக் காரணம்,” என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சாகாரியா ஷாபான் விளக்கமளித்தார்.
“சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்முறை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது. கட்டமைப்பு அத்துமீறப்படவில்லை. ‘மைஐஎம்எம்’ 30 ஆண்டுகளாக இயங்கிவரும் மிகவும் பழைய செயல்முறைத் திட்டமாகும். அதில் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே மீண்டும் இதுபோன்ற கோளாறு ஏற்படாது என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
புதிய ஒருங்கிணைந்த குடிநுழைவுச் செயல்திட்டம்
தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு செயல்முறைத் திட்டம் (NIISe) தற்போதைய கட்டமைப்புக்குப் பதிலாக 2028ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்படும்.
புதிய செயல்முறைக்கு முழுவதும் மாறும் வரையில் மீண்டும் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற திரு சாகாரியா, அத்தகுத் தடைகளை அனைவரும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மலேசிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி நாட்டின் 114 எல்லைச் சாவடிகளும் கோளாற்றால் பாதிக்கப்பட்டன. கடல்வழியாக 56 நுழைவுச் சாவடிகளும், நிலவழியாக 30 சாவடிகளும் 28 விமான நிலையங்களும் மலேசியாவில் உள்ளன.

