பெர்லின்: சிட்னி நகரின் போண்டாய் கடற்கரையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பெர்லின், லண்டன், நியூயார்க் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் ஹனுக்கா நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
யூதர்கள் கொண்டாடும் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாட ஜெர்மனி தலைநகர் பெர்லினின் பிரேண்டன்பர்க் வாசலில் (Brandenburg Gate) விளக்கு அலங்காரம் இடம்பெற்றது. அதனையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் வலுப்படுத்தியதாக அந்நகரக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹனுக்கா கொண்டாட்டங்களுக்கும் யூதர் தேவாலயங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதாக அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நகரக் காவல்துறை கூறியது. காவல்துறையினர் மேல்விவரங்களைத் தர விரும்பவில்லை.
போலந்து தலைநகர் வோர்சோவின் ஆக முக்கியமான யூதர் தேவாலயத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) இரட்டிப்பாக்கப்பட்டது.
பெர்லினின் பிரேண்டன்பர்க் வாசலில் நடக்கும் ஹனுக்கா நிகழ்ச்சியில், போண்டாய் கடற்கரைத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்குக்காக வழிபாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.
பொதுவாகவே பெர்லினில் யூதர் தேவாலயங்களிலும் மற்ற யூதர் நிலையங்கள், வளாகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. நாசி ஆட்சிக் காலத்தில் நடந்த இனப் படுகொலை காரணமாக ஜெர்மனி பல காலமாக யூதர்கள், இஸ்ரேல் அதிக அளவு அக்கறை கொண்டு வருகிறது.
டிசம்பர் 14லிருந்து 22ஆம் தேதி வரை யூதர் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை முடுக்கிவிடுமாறு பிரான்சின் உள்துறை அமைச்சர் லோரன் நுனெஸ் உள்ளூர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாக அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதிக கூட்டத்தை ஈர்க்கும் சமயச் சேவைகள், ஒன்றுகூடல்கள் அதிலும் குறிப்பாகப் பொது இடங்களில் நடக்கும் அத்தகைய நிகழ்ச்சிகளில் அதிக விழிப்புடன் இருக்குமாறு திரு நுனெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
போண்டாய் கடற்கரைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல், யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்று என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

