டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றால், அந்த நாட்டின் போர்க்கப்பல்கள் ஈரான் ஏவுகணைகளால் மூழ்கடிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
“அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையின் காவல்காரராக மாற விரும்புகிறார். இது அமெரிக்க ராணுவத்தின் வேலையா,” என்று அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமெனியின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி கேள்வி எழுப்பினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் போர்ப்பதற்றத்திற்கு மத்தியில், தற்போது இரண்டு வாரக் கால தற்காலிகப் போர்நிறுத்தம் நடப்பில் உள்ள நிலையில், ரெசாயி இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கக் கப்பல்கள் ஈரானிய ஏவுகணைகளின் இலக்குகளாக உள்ளன என்றும் முதல் தாக்குதலிலேயே அவை அழிக்கப்படும் என்றும் ரெசாயி தெரிவித்தார்.
ஈரான்மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தினால், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து, ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை ஈரான் வசூலிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தற்போதைய போர்நிறுத்தத்தை நீட்டிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் இது, தனது தனிப்பட்ட கருத்து என்றும் முன்னாள் புரட்சிகர பாதுகாப்புப் படைத் தளபதியான ரெசாயி குறிப்பிட்டுள்ளார்.

