ஆண்டுக்கு 16 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்ட முதலீட்டு நிறுவனம் பற்றி ராபர்ட் (உண்மையான பெயர் அல்ல) முதன்முதலில் கேள்விப்பட்டபோது அவருக்குச் சந்தேமாக இருந்தது. அவர் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர் என்பதால் எச்சரிக்கையாகவே இருந்தார்.
ஆனால், 38 வயதான இந்தத் தொழிலதிபர், 2018ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் இயக்குநரான ஜேம்ஸ் நிக்கலஸ் கோட்ரோவ்ஸ்கியைச் சந்தித்த பிறகு மனம் மாறினார்.
கடந்த ஆண்டு பேங்காக்கில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த ஐஸ் ஹாக்கி வீரர்தான் இந்த ஜேம்ஸ் நிக்கலஸ் கோட்ரோவ்ஸ்கி.
தமது ‘ரைட் சாய்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் கடன் வழங்குதல், பணம் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளைச் செய்வதாக அவர் ராபர்ட்டிடம் நம்பும்படி கூறியுள்ளார்.
அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் பிலிப்பீன்சில் சிறிய கடன் வழங்கும் வணிகமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பின்னர் சிங்கப்பூரிலும் பிலிப்பீன்சிலும் பரவி 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 22 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$28.3 மில்லியன்) அதிகமான நிதியைப் பெற்று நிதிச் சேவைக் குழுமமாக வளர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான ராபர்ட், இதனை நம்பி 2018 முதல் ஆர்சிசி நிறுவனத்தில் மொத்தம் $850,000 முதலீடு செய்தார். பல ஆண்டுகளாக வட்டிப் பணம் சரியாக வந்த நிலையில் 2024ல், அசலைத் திரும்பப் பெற அவர் முயற்சி செய்தார்.
ஆனால், ஆர்சிசி நிறுவனம் ஒப்பந்தப்படி பணத்தைத் தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்நிலையில் தம்மைப்போலவே மொத்தம் $9 மில்லியனை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த 19 பேர் கொண்ட குழு இருப்பதை ராபர்ட் கண்டறிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி, உயர் நீதிமன்றம் ராபர்ட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததுடன் வட்டியுடன் சேர்த்து ஏறக்குறைய $800,000 தொகையை அவருக்கு வழங்குமாறு ஆர்சிசி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், தீர்ப்பு வந்த அடுத்த ஒரு வாரத்தில், கோட்ரோவ்ஸ்கி, நொடித்துப்போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனால் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் $9 மில்லியன் தொகை கிடைக்கவே இல்லை.
இந்த வழக்குப் பற்றி ஏண்டி யோ சேம்பர்ஸ் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஏண்டி யோ கருத்துரைத்தார்.
“ஒருவர் நொடித்துப்போய்விட்டார் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டால், கடன் கொடுத்தவர்களால் தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. சொத்துகளைப் பறிமுதல் செய்யவோ வங்கிச் கணக்குகளை முடக்கவோ முடியாது. அதிகாரபூர்வச் சொத்துக்காப்பாளர் மட்டுமே அவரது சொத்துகளைக் கட்டுப்படுத்த முடியும்,” என்று அவர் விளக்கினார்.
“இதன் கசப்பான உண்மை என்னவென்றால், ஒரு நபர் மொத்தம் $9 மில்லியன் கடன் பாக்கி வைத்திருந்து, அவரிடம் விற்கக்கூடிய சொத்து மதிப்பு $500,000 மட்டுமே இருந்தால், வழக்கில் வென்ற ராபர்ட்டுக்குக்கூட மிகச்சிறிய தொகையே வந்துசேரும்,” என்றார்.
கோட்ரோவ்ஸ்கியைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை என்றும் எப்போதாவது பேசினால், தாம் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயாரின் மருத்துவச் செலவுகளைக் கவனித்து வருவதாகவும் மழுப்பி வந்ததாக ராபர்ட் கூறினார்.
நீதிமன்ற உத்தரவுபற்றியும் அவர் பேசினார்.
“பணம் கிடைத்தால் நல்லது என்று எங்களுடன் 19 முதலீட்டாளர்களும் வந்தார்கள். ஆனால் பலர், பணம் போனால் போகட்டும், இதற்கு மேல் எங்களால் நிம்மதியை இழக்க முடியாது,” என்று கைகளைக் கழுவிவிட்டனர்,” என்றார் அவர்.
2016 மற்றும் 2025க்கு இடையே கோட்ரோவ்ஸ்கி மற்றும் அவரது பங்காளிகளால் ஏமாற்றப்பட்ட 20 வெளிநாட்டவர்கள் சார்பில் ‘ஜேஎம்எஸ் ரோஜர்ஸ்’ என்ற கடன் மீட்பு நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திரட்டிய அறிக்கை சிங்கப்பூர்க் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலும் இன்னும் பலர் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

