வார்சா: பெலருஸ்-போலந்து எல்லையருகில் வாழும் போலந்து மக்கள், துப்பாக்கியால் சுடும் சத்தமும் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தமும் கேட்பதாக வியாழக்கிழமை கூறினர்.
ரஷ்யாவின் வாக்னர் படையினர் பெலருஸ் சிறப்புப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்காக எல்லையிலிருந்து சில மைல் தொலைவிலுள்ள பகுதியைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து, உக்ரேன் போர் தங்களையும் எட்டிவிடுமோ என போலந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொல்பின்-ஒக்ரோட்னிகி கிராமத்தின் மேயரான 56 வயது திருவாட்டி அகதா மொரோஸ், தனது குடும்பத்தின் பாதுகாப்பை நினைத்து பதற்றத்தில் இருப்பதாகக் கண்ணீர் மல்கக் கூறினார்.
“எனக்குப் பயமாக இருக்கிறது. என் மகன் ராணுவத்தில் இருக்கிறான். அவனை நினைத்து கவலைப்படுகிறேன். எனக்குப் பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். என் கணவரும் இயலாதவர். அவர்களை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது,” என்றார் திருவாட்டி மொரோஸ்.
“ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்கப்போவதாக எல்லோரும் சொல்கிறார்கள்,” என்றார் அவர்.
ரஷ்யாவின் நட்பு நாடான பெலருசில், வாக்னர் தலைவர் யெவ்கெனி ப்ரிகோசின் தனது படைவீரர்களை வரவேற்கும் காணொளி புதன்கிழமை வெளியானது. உக்ரேன் போரில் மேற்கொண்டு பங்குபெறப் போவதில்லை என்று வீரர்களிடம் அவர் சொன்னார். ஆனால், பெலருஸ் ராணுவத்திற்குப் பயிற்சி அளித்து, ஆப்ரிக்காவுக்காகத் தங்களது பலத்தை வளர்த்துக் கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.
பெலருஸ் பயிற்சித் தளத்தில் தற்போது எத்தனை வாக்னர் படைவீரர்கள் உள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
“ஹெலிகாப்டர்கள் பறக்கும் சத்தம் எங்களுக்குக் கேட்கிறது. அவை பறக்கும்போது எங்கள் வீட்டுச் சன்னல்கள் எல்லாம் அதிர்கின்றன,” என்று 45 வயது விவசாயி திரு ஆடம் லிகோர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பெலருஸ் எல்லைப்பகுதியைக் கண்காணிப்பதாகவும், பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் போலந்து தற்காப்பு அமைச்சு மின்னஞ்சல்வழி வியாழக்கிழமை தெரிவித்தது.

