கழிவால் நேரும் அழிவு! ஓர் அலசல்

5 mins read
6f3a383c-f914-497d-9358-e7c96a4a34db
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பைமேடு. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 5

“ஆகாயம் மேலே

பாதாளம் கீழே

ஆனந்த உலகம் நடுவினிலே”

- இப்படி ரஜினிக்காக ‘நான் வாழவைப்பேன்’ படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதினார்.

800 கோடி - இது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய உலக மக்கள்தொகையின் எண்ணிக்கை.

இந்த 800 கோடி மக்களும் எவ்விதப் பாகுபாடும் இன்றிக் குப்பைக் கழிவுகளால் பூமிப்பந்தையே சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னதான் ‘மட்கும் குப்பை’, ‘மட்காத குப்பை’ என பிரித்துக் காட்டினாலும் யாது பயன்?

‘பிளாஸ்டிக்’ போன்ற மட்காத குப்பைகளால் பூமிக்கு மேல் காற்று கடுமையாக மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.

மருத்துவக் கழிவுகள், மின்னணுப் பொருள்கள் போன்ற மட்கும் குப்பைகளால் பூமிக்குக் கீழே, நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்படைகிறது.

உலகில் ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டன் குப்பைகள் நகர்ப்புறங்களில் உருவாகின்றன.

உலகில் அதிக அளவில் குப்பை கொட்டுபவர்கள் அமெரிக்கர்கள். உலகளவில் இந்தியா 27 விழுக்காடு குப்பைகளைக் கொட்டுகிறது. இதைவிட அதிகம் அல்லது குறைவு என்று சொல்லும் புள்ளிவிவரங்களும் உள்ளன.

தலைநகர் டெல்லி இன்னும் சிலபல ஆண்டுகளில் வாழத் தகுதியற்ற நகரமாகிவிடுமோ என்ற பெருங்கவலையில் இருக்கிறது இந்திய அரசு.

அங்கு இப்போதே சுவாசிப்பதற்குச் சுத்தமான காற்று இல்லை.

“மிகவும் சுத்தமான தெருக்களைக் கொண்ட நாடு ஜப்பான். அங்கு 1990களில் தொடர்ச்சியான கழிவு மேலாண்மைச் சட்டங்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தது. 2024ஆம் ஆண்டில் மிகவும் மாசுபட்ட முதல் ஐந்து நாடுகள் - பங்ளாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் புர்கினா பாசோ. இது தொழில்துறை நடவடிக்கைகள், புதைபடிவ எரிபொருள் பயன்பாடு, விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை அடிப்படையிலான பட்டியலாகும்.

கடலில் சேரும் 9 மில்லியன் டன் குப்பைகள்

“கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகின் 75% மக்கள் குப்பைகளைக் கொட்டியதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

“ஒவ்வோர் ஆண்டும் 9 பில்லியன் டன் குப்பைகள் கடலில் சேர்கின்றன. உலகிலேயே அதிக குப்பையாகக் கிடக்கும் பொருளாக சிகரெட் துண்டுகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 4.5 டிரில்லியன் குப்பைகள் தரையில் வீசப்படுகின்றன,” என ஆய்வாளர் கல்லிப்சோ தனது 2024 மே 28ஆம் தேதியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்த, செழிப்பான நாடுகளிடம் மிக அவலமான மனநிலை உள்ளது.

அவை, தங்கள் நாட்டுக் கழிவுகளை ‘மின்னணுக் கருவிகள்’ என்ற பெயரில் ‘கொள்கலன்’கள் வழியாகத் பிறநாட்டுத் ‘தரகர்கள்’ மூலம் தள்ளிவிடுகின்றன.

அத்தரகர்கள் பணத்துக்காகச் சொந்த நாட்டை குப்பையாக்கத் துணிகிறார்கள். அமெரிக்கா அனுப்பிவந்த குப்பைகளை சீனாவுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசு தடைபோட்டுள்ளது.

இப்படிப்பட்ட ‘தரகர்’களால் கேரள மருத்துவக் கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொட்டப்பட்டு வந்தன.

அண்மைக்காலமாக மக்கள் விழிப்படைந்துள்ளதால் கேரளக் குப்பைகளைத் தமிழகத்துக்குள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மலைகளாக உருவெடுக்கும் குப்பைமேடுகள்

தமிழகத்தில் நாளொன்றுக்கு ஏறக்குறைய 15,000 மெட்ரிக் டன் குப்பைகள் குவிகின்றன. சென்னையில் மட்டுமே ஒரு நாளைக்கு ஏறத்தாழ 6,600 மெட்ரிக் டன் குப்பைகள் போடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. அவற்றை அகற்றும் பணியில் ஏறக்குறைய 21,000 பேர் ஈடுபடுகின்றனர்.

சென்னையின் வடக்கே கொடுங்கையூரிலும் தெற்கே பெருங்குடியிலும் 200 முதல் 250 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

2051ஆம் ஆண்டில் குப்பைகள் பெரிய மலைகளாக உருவெடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தீர்வற்ற குப்பைக்குத் தீர்வாக ‘கழிவுப் பொருள்களிலிருந்து மின்சாரம்’ எனும் திட்டத்தை அரசு அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

‘ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை’ எனும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் முதல் கட்டமாகச் செயல்படுத்த இருக்கிறது.

சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், குப்பைகளைச் சேகரிப்பது, பிரிப்பது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றைச் செய்து வருகிறது.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை உயிர்ச்சுரங்கமாக்குவதற்கான திட்டமும் உள்ளது

பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பை, வாகனங்களிலிருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் ரூ.500ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தூய்மைக்கேட்டால் அதிகரிக்கும் ஆபத்து

பூமியால் செரிக்க முடியாத காகிதங்கள், நெகிழிப் பொருள்களை எரிப்பார்கள். இதிலிருந்து வெளியேறும் வெப்பம் கொதிகலன்களில் உள்ள நீரைக் கொதிக்கச் செய்து நீராவியாக்கும். அந்த நீராவியை மின்சக்தியாக மாற்றுவார்கள்.

குப்பைகளை எரிக்க நவீன நுட்பங்களைப் பயன்படுத்தினாலும்கூட அந்தப் புகை ‘டயாக்சின்’, ‘பியூரான்’ உள்ளிட்ட நச்சுவாயுக்களை வெளியிடும்.

மேலும், மனிதர்களுக்கு மூளை பாதிப்பு, தொண்டை எரிச்சல் உண்டாக்கக்கூடிய பாதரசம், ஈயம், ‘நைட்ரஜன் ஆக்சைட்’ ஆகியவற்றை வெளியேறி வளிமண்டலத்தை மாசுபடுத்தும். அதிலும், ‘டயாக்சின்’ புற்றுநோயை உருவாக்கக்கூடியது.

மின்சாரத்திற்காக நிலக்கரியை எரிப்பதால் ஏற்கெனவே வான்வெளி மாசடைந்து கொண்டிருக்கிறது. இனி குப்பை எரிப்பு மின்சாரம் என்பது நிலக்கரி எரிப்பைவிட மூன்று மடங்கு மிகுந்த கெடுதலைத் தரும்.

இன்னொருபுறம், சென்னை மாநகராட்சி 250 ஏக்கரில் கொடுங்கையூர் குப்பைமேட்டில் இருந்து திடக்கழிவுகளை ‘பயோமைனிங்’ எனும் முறையில், பழங்குப்பைகளை அகழ்வாய்ந்து, அப்புறப்படுத்தி வருகிறது.

அவ்வாறு அப்புறப்படுத்தப்படும் குப்பையை எங்கே போடுவார்களோ?

எனினும், 2027க்குள் குப்பை குவியல் இல்லாத பகுதியாக அவ்விரு இடங்களும் மாறிப்போகும் என்கிறார்கள். ஏற்கெனவே, பெருங்குடியில் 102 ஏக்கர் சதுப்புநிலம் மீட்கப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

குப்பைமேடுகளால் காற்று, நிலத்தடி நீர் மாசுடன், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கி, மலேரியா, சிக்குன்குனியா போன்ற பலவித நோய்களாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மூக்கைப் பொத்திக்கொண்டு தன் வீட்டுக் குப்பையை எங்கேயாவது போட்டுவிடும் மக்கள் மனம் மாற வேண்டும்.

ஆகாயம் மேலே இருப்பதை நாம் பார்க்கிறோம். பாதாளம் கீழே இருக்கிறதா என்பது தெரியாது.

ஆனால், ஆகாயத்திற்கும் பாதாளத்திற்கும் நடுவில் பூமி இருப்பது நாம் அறிந்த உணர்ந்த ஒன்று. அப்படிப்பட்ட பூமியில் நாம் குறைந்தபட்ச சமூக அக்கறையுடன் வாழ்வோம்.

‘மஞ்சள் பை’ எடுத்துக்கொண்டு கடைக்குப் போனால் ‘பிளாஸ்டிக்’ பையைத் தவிர்க்கலாம்!

இப்படிச் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்தாலே பூமி குளிர்ந்துபோகும்.

நாம் வாழும் காலத்திலேயே பூமியை ஆனந்த உலகமாக மாற்றலாம்.

நிலமெல்லாம் குப்பை! நீரெல்லாம் குப்பை!

நிலமெல்லாம் குப்பையாக்கும் மனிதகுலம், நீர்நிலைகளிலும் குப்பையைக் கொட்டும் கொடூரம் நடக்கிறது.

மனிதன் கடலையும் விட்டுவைக்கவில்லை.

‘ஓஸோன் கிளீனப்’ என்ற செயலாக்கத்தின்கீழ் சில கப்பல்கள் கடலில் சென்றவாறே மிதக்கும் ‘பிளாஸ்டிக்’ கழிவுகளை அகற்றுகின்றன. ஆண்டுக்கு ஏறக்குறைய 11 மில்லியன் டன் கழிவுகளை அவை சேகரிக்கின்றன.

‘குப்பை வண்டிதானே’ என ஏளனமாய்ப் பார்ப்பதுபோல், ‘குப்பை சேகரிக்கும் கப்பல்’தானே எனக் குறைத்து மதிப்பிடக்கூடாது.

தரம் பிரிக்கும் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இந்தக் கப்பல் விலை கூடுதலானது. இந்தக் குப்பைக் கப்பலை இயக்க அதிக செலவும் ஆகிறது.

இந்த தகவல்களை ‘இன்டர்நேஷனல் மேரிடைம் ஆர்கனைசேஷன்’ ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

மீன் உட்பட உண்ண உணவு தரும் கடலை இப்படியா சிரமப்படுத்துவது? யோசிப்போம்.

குறிப்புச் சொற்கள்