தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

2 mins read
d8b7630e-bbaa-40d0-b1d2-b84751a81735
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் 2024 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். - படம்: ஊடகம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) சென்னை நேரு விளையாட்டரங்கில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

அதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும் என்பதே என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருங்கள்,” என்று கூறினார்.

“உங்களுக்கான திட்டங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். மாணவர்களான நீங்கள் தொடர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

“புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திரு ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் “கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு தமிழக அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும். அதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும்,” என்றும் அவர் சொன்னார்.

விழாவில், பொதுத் தேர்வுகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்