மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி: தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி: தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

2 mins read
4cad073e-2532-4be6-8f75-d780b9c34668
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.  - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தமிழக அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி, காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் வியாழக்கிழமை (மே 2) போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு, காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அங்குள்ள முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதாக அம்மாநில மக்களிடம் வாக்குறுதி வழங்கி வருகின்றனர். மத்திய அரசும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மறைமுகமாக உதவி வருகிறது. ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேகேதாது அணை விவகாரத்தில் மெளனம் காத்து வருகிறார். கர்நாடக அரசுக்கு தமிழக அரசு துணை போகிறது” என்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறினர்.

“மேகதாதுவில் அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது, தமிழகம் பாலைவனமாகும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே உள்ளது” என்றும் விவசாயிகள் கவலைத் தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம் நடைபெறும் இடத்தில் படுக்க வைத்து, மனிதர்கள் இறந்தது போல் பாவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்
விவசாயிகள்போராட்டம்