கனமழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்

கனமழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்

2 mins read
db047bb4-ece8-474d-bedd-998d1f5fce9d
மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்களும் மற்றப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

திருக்கனூர்: புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50,000 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வானுார், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 20,000 ஏக்கர் நெல், 10,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, வேர்க்கடலை, தட்டைப்பயிறு, தர்பூசணி உள்ளிட்ட பயிர்களும் மழைநீரில் மூழ்கின. மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 5,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யத் தயார் நிலையில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சேதமடைந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டு வருகிறார்.

ஓரிரு நாள்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பருவ நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பொன்னி, பி.பி.டி போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மார்கழி கடைசியிலும் தை மாதம் முதலிலும் அதாவது பொங்கலுக்கு அறுவடை செய்யும் காலகட்டமாகும். தற்போது மழை பெய்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் உழவர் திருநாளை நிம்மதியோடு கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என புதுச்சேரி விவசாயிகள் சங்க செயலாளர் ரவி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். “கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

“இதனால் விவசாயிகள் பெருத்த நட்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும்.

“மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்