ராமேஸ்வரம்: இந்தியாவுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 1983ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட 300,000க்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இந்தியா சென்றனர்.
இதில் பலர் தாயகம் திரும்பி விட்டனர். தற்போது தமிழக முகாம்களில் ஏறத்தாழ 58,000 பேரும், முகாம்களுக்கு வெளியே 34,000 பேரும் வசித்து வருகின்றனர்.
ஐநா அகதிகள் அமைப்பின் (UNHCR) உதவியுடனோ, சுயமாகவோ இலங்கை திரும்ப விரும்புபவர்களை அழைத்துவருவதற்காக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போர்க் காலத்தில் முறையான பயண ஆவணங்களின்றி அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் அகதிகளாகப் பதிவு செய்தோர்மீது பதியப்பட்டிருந்த குடியேற்றச் சட்ட மீறல் வழக்குகளும் சிக்கல்களும் தளர்த்தப்படுகின்றன.
ஐநா அகதிகள் அமைப்பின் உதவியோடும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் வாயிலாகவும் அவர்களின் உண்மையான குடியுரிமை உறுதிசெய்யப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்கள் வழியாகத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வாயிலாக இலங்கைக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படுவர்.
எனினும், கொலை, தேசத்துரோகம் அல்லது தீவிர குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்றும், அவர்கள் துறைமுகங்களிலேயே தடுக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த 2009 மே 19ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறியவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.


