‘ஷிகெல்லா’ நோய்: கண்காணிப்பு வளையத்தில் மதுரை மருத்துவமனைகள்

‘ஷிகெல்லா’ நோய்: கண்காணிப்பு வளையத்தில் மதுரை மருத்துவமனைகள்

2 mins read
c4da2be0-ceab-4129-9259-18e935857156
கேரளாவில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ தொற்றுநோயின் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

மதுரை: கேரளாவில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ தொற்று எதிரொலியாக மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த மருத்துவமனைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கேரளாவில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ தொற்று, அசுத்தமான உணவு, குடிநீர், சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவும் குடல் நோயாகும். கோழிக் கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தத் தொற்று, மனிதர்களின் குடலைத் தாக்கி கடுமையான வயிற்றுப் போக்கு, தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் ஓர் ஆபத்தான கிருமியாகும். இவை 10 முதல் 100 வரை எண்ணிக்கையில் உடலுக்குள் சென்றாலே எளிதில் தொற்றை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் சுகாதாரமாக இருந்தால், இந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை ‘ஷிகெல்லா’ கிருமித் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இத்தொற்றில் இருந்து மக்களை காக்கவும், பாதிப்புகளைத் தடுக்கவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.

கடுமையான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்காக மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்க ஓ.ஆர்.எஸ். கரைசல்கள், குளுக்கோஸ் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில், ஜூன் மாதத்தில் மட்டும் 120 பேரிடம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் ‘வெஸ்ட் நைல்’, ஷிகெல்லா ஆகிய கிருமித் தொற்றுகள் பரவி வருகின்றன. அவை இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை. இந்த இரண்டு தொற்று நோய்களும் காய்ச்சலையும் கடுமையான உடல்நலக் கேட்டையும் ஏற்படுத்தக்கூடியவை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்