ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்; ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்; ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

2 mins read
f7edc55f-2ff5-40a0-ad2a-4504b1283dbd
ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.  - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வருவதாகக்கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைச் சிறைப் பிடிப்பதும், பல நேரங்களில் தாக்குவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 16ஆம்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகு 18ஆம் தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கைச் சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி சனிக்கிழமை (பிப்ரவரி 21) ஒரு நாள் மட்டும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர்.

இதனால் ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடித் தொழிலைச் சார்ந்தவர்கள் என 5,000க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

வழக்கமாக வார இறுதி நாள்களில் மீன் வியாபாரம் அதிகமாக இருக்கும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக சனிக்கிழமை ராமேஸ்வரம் துறைமுகம் சத்தமின்றிக் காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சி மடம் வலசை பேருந்து நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்