தேர்தல் திருவிழாவின் கடந்த காலம்

தேர்தல் திருவிழாவின் கடந்த காலம்

4 mins read
9107cdde-1621-4c41-a685-bcbf2d694f4f
ராஜாஜி. - கோப்புப்படம்: புதிய தலைமுறை
multi-img1 of 7
Google News Preferred Icon

தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்திற்கான தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

கூட்டணிகள் நிறைவாகி, கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தலைவர்களும் தங்கள் பிரசாரத்தை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களத்தில் தொடக்கம் முதலே அனல் பறக்கிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தலும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க இருக்கிறது. இந்நேரம் இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் கடந்த காலத்தைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம்.

முதல் தேர்தல் 1952

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பது 1952ஆம் ஆண்டு நடந்தது. அன்று ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்ததால் இந்தத் தேர்தல் ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் வரை 9 நாள்கள் நடைபெற்றன.

அப்போது சென்னை மாகாணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகள் இணைந்திருந்தன. மொத்தமாக 309 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இதில் 375 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எதற்காக 66 பேரை கூடுதலாகத் தேர்வு செய்ய வேண்டும்?

அப்போது 66 தொகுதிகள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் (Two-member constituencies) கொண்டதாக இருந்ததே இதற்குக் காரணம்.

அதாவது, பட்டியலின வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் ஒரு பொது உறுப்பினரும் ஒரு பட்டியலின உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்படும் விதமாக தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர்கள் கட்சி, நீதிக்கட்சி உள்ளிட்டவை களத்தில் நின்றன. திமுக போட்டியிடவில்லை. ஆனால், திமுகவின் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு அது ஆதரவளித்தது.

இந்த முதல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 152 இடங்களையும் 34 விழுக்காடு வாக்குகளையும் பெற்று காங்கிரஸ் தனித்துவமாக விளங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தது.

பின்னர் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1953ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது. இதையடுத்து, காங்கிரசிஸ் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னையால் ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலக, காமராஜர் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.

இரண்டாவது தேர்தல் 1957

இரண்டாவது தேர்தல் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளப் பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் இணைந்தன. மொழிவாரியாக மறுசீரமைக்கப்பட்ட பிறகு சென்னை மாநிலத்திற்கு நடந்த முதல் தேர்தல் இது.

மொத்தம் 167 சட்டமன்றத் தொகுதிகள். இதில் 205 இடங்கள்.

38 தொகுதிகள் இரட்டை உறுப்பினர்கள் கொண்டவையாக இருந்தன. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 103 இடங்கள் தேவை.

இந்தத் தேர்தலில் திமுக முதல்முறையாக தேர்தலில் நின்றது. ஆனால், அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்ததால் அதன் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகவே கருதப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி 151 இடங்கள் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

திமுக சார்பாக அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் வெற்றி வாகை சூடினர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திமுக 15 இடங்களைப் பிடித்தது. 14 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. மீண்டும் காமராஜர் தமிழக முதல்வரானார்.

மூன்றாவது தேர்தல் 1962

1962ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் நீக்கப்பட்டன. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் அதே எண்ணிக்கையில் ஓர் உறுப்பினர் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

சில தொகுதிகள் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்காகத் தனித்தொகுதிகளாக ஆக்கப்பட்டன. மொத்தம் 206 தொகுதிகள். பொதுத் தொகுதிகள் 168, தனித்தொகுதிகள் 38.

இதற்கிடையே, திமுக மாபெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. காங்கிரஸ் 206 தொகுதிகளில் போட்டியிட்டு 139 இடங்களில் வென்றது. திமுக 50 இடங்களில் வென்றது.

27 விழுக்காடு வாக்குகள் பெற்று இரண்டாவது கட்சியாகவும் சட்டமன்றத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாகவும் திமுக அமர்ந்தது. காமராஜர் மூன்றாவது முறையாக முதல்வரானார். பின்னர் கட்சிப் பணிக்காக காமராஜர் பதவி விலக, பக்தவத்சலம் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

நான்காவது தேர்தல் 1967

இந்தத் தேர்தலில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மூன்று கட்டமாகத் தேர்தல் நடந்தது.

மொத்தத் தொகுதிகள் 234. இதில் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது திமுக.

174 இடங்களில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், உடல்நலம் குன்றிய முதல்வர் அண்ணா, 1969ஆம் பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். இதனையடுத்து கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

- பார்வை நீளும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்