பழனி கோயில் சொத்து முறைகேடு: தலைமறைவான மூவருக்கு வலைவீச்சு

பழனி கோயில் சொத்து முறைகேடு: தலைமறைவான மூவருக்கு வலைவீச்சு

2 mins read
15ce8d7f-9d13-4228-af0b-8d63e863684d
பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தைக் கடந்த ஜூலை 6ஆம் தேதி பத்திரப்பதிவு செய்த வழக்கில் நிலத்தை விற்றவரும் வாங்கியவர்களும் தலைமறைவாகி விட்டனர். - படம்: தி இந்து
Google News Preferred Icon

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில் நிலத்தை வாங்கிய இரண்டு பேரும் விற்றவரும் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழனி கோயில் நில முறைகேடு வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை முதல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலத்தை மோசடியாகப் பதிவு செய்த வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகளும் வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி சட்ட விரோதமாக இரண்டு பேரின் பேரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்ட விதிகளை மீறி பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாகப் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதும் நிலத்தை விற்பனை செய்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலையை அடுத்த பாப்பாகுளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை, பழனியை அடுத்த டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீதும் ஆலய நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடாக நடைபெற்ற இந்த பத்திரப் பதிவு செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்