சென்னை: சென்னையில் உள்ள மழைநீர் வடிகாலுக்கு கொசு வலை போர்த்துவது குறித்து கவுன்சிலர் ஒருவர் தெரிவித்த யோசனை செயல்படுத்தப்பட்டதாக மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சர்ச்சையாக மாறும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றும் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் வரவேற்றாலும் வடிகால் அமைப்பு காரணமாக சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த மழைநீர் வடிகால் அமைப்புக்கு கொசுவலை போர்த்தும் நூதன முயற்சியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து, விளக்கம் அளித்துள்ள மேயர் பிரியா, ஒரு கவுன்சிலர் விடுத்த கோரிக்கையை ஏற்று கொசுவலை பயன்படுத்தப்பட்டது என்றும் இந்த நடவடிக்கை மாநகராட்சி அறிவிப்பாக கருதப்பட்டுவிட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

