காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி உட்பட நான்கு காவல்துறையினர் சேர்ப்பு

1 mins read
c10349e5-d2fd-4ec3-8835-279c1602a353
காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த காவலாளி அஜித்குமார். - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் காவல்துறை அதிகாரி உள்பட நால்வரை இணைத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சண்முகசுந்தரமும் திருப்புவனம் காவலர்கள் மூவரும் அந்த வழக்கில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தியபோது தாக்கியதில் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தனிப்படை காவலர்கள் ஐவரையும் காவல்துறை ஓட்டுநர் ஒருவரையும் கைது செய்தது.

இதற்கிடையே, அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு ஏற்ப, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்த சிபிஐ, தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறது. டெல்லி தடயவியல் ஆய்வக அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது.

இந்நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்கு டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்