டெல்லிக்கு அடுத்து சென்னையா?: காற்று மாசு திடீர் அதிகரிப்பு

2 mins read
d5d010ec-bda3-42b2-9cc3-f3133c2f6e2e
கடந்த ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. - படம்: மாலை மலர்

சென்னை: தலைநகர் டெல்லி காற்று மாசுபாடு காரணமாக விழிபிதுங்கி வரும் நிலையில், சென்னை மாநகரத்திலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

கடற்கரை நகரமான சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பது நல்லதல்ல என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

டெல்லி போன்று இந்தியாவின் மாசுபாடு நிறைந்த மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சென்னை தூய்மையான நகரமாகவே கருதப்படுகிறது.

எனினும், அங்கு காற்றின் தரம் குறைந்துள்ளது. கடந்த ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது சென்னையில் காற்றின் தரக்குறியீடு 170க்கும் மேல் பதிவாகியுள்ளது. பொதுவாக காற்றின் தரம் 50 புள்ளிக்குக் கீழே இருப்பதுதான் நல்லது எனக் கருதப்படுகிறது.

கடந்த 2021, மே மாதம் சென்னையில் காற்று மாசுபாடு ஆகக் குறைவாக 53 புள்ளிகள் பதிவானது. பொதுவாக சென்னையில் டிசம்பர், ஜனவரி போன்ற குளிர் நிலவும் மாதங்களில் காற்றின் தரக்குறியீடு 100 புள்ளிகளுக்கும் மேல் பதிவாகும். ஆனால், நடப்பாண்டு டிசம்பரில் அது மிகக் கடுமையாக அதிகரித்துள்ளளது.

சென்னையின் புறநகர்ப் பகுதியான பெருங்குடியில் சராசரி காற்றின் தரக்குறியீடு ஏறக்குறைய 200 என்றும் கொடுங்கையூரில் 170 என்றும் பதிவாகியுள்ளன.

அதேபோல் மணலி, அரும்பாக்கம், சென்னை அமெரிக்க தூதரகப் பகுதி என மற்ற இடங்களில் காற்றுத் தரக்குறியீடு ஏறக்குறைய 170ஐ நெருங்கி வருகிறது. இது சென்னைவாசிகள் நாள்தோறும் 3.3 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்று ‘தி ஃபெடரல்’ ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

சென்னையில் கட்டுமானப் பணிகள் அதிகரித்துள்ளன. புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அலுவலக வளாகங்களும் கட்டப்பட்டு வருவதால் காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

நடப்பு டிசம்பர் மாதம் சென்னையின் ஒட்டுமொத்த காற்றுத் தரக்குறியீடு பெரும்பாலும் 150 முதல் 200 வரை பதிவாகி உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், இதனால் இருதய நோய், கண்-தோல் நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்