தரவரிசையில் பின்தங்கிய சென்னை விமான நிலையம்

தரவரிசையில் பின்தங்கிய சென்னை விமான நிலையம்

2 mins read
9be0688b-5aac-42ce-9c43-617909b43d69
ஐந்தாம் இடத்தைத் தக்கவைக்க கோல்கத்தாவுடன் போராடி வருகிறது சென்னை. - கோப்புப்படம்: தி இந்து
Google News Preferred Icon

சென்னை: இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்களைவிட சென்னை விமான நிலையம் பின்தங்கியிருப்பது தரவரிசைமூலம் தெரியவந்துள்ளது.

முன்பு டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாகச் செயல்பட்டு வந்த சென்னைக்கு, தற்போது தரவரிசையில் ஐந்தாம் இடம்தான் கிடைத்துள்ளது. பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னையை முந்திவிட்டன.

இந்நிலையில், ஐந்தாம் இடத்தைத் தக்கவைக்க கோல்கத்தாவுடன் போராடி வருகிறது சென்னை.

பயணிகளுக்கான வசதிகள், பெரிய, கூடுதல் ஓடுபாதைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விமான நிலையங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த மே மாதம் சில முக்கியமான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதன்படி, கடந்த மே மாதத்தில் வரை கோல்கத்தா விமான நிலையம் 18.7 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சென்னை விமான நிலையம் 19.04 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலேயான வித்தியாசம் 34,000 பயணிகள்தான்.

மே மாதம் சென்னை விமான நிலையத்திலிருந்து 13,025 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், கோல்கத்தாவில் இருந்து 12,080 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. வித்தியாசம் 945 விமானங்கள்தான்.

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சென்னைக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம் கோல்கத்தாவில் 15.96 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, நடப்பாண்டில்16.59 லட்சமாக, அதாவது நான்கு விழுக்காடு அதிகரித்திருந்தது.

இதே காலகட்டத்தில் சென்னையில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு குறைந்துவிட்டது.

ஹைதராபாத் விமான நிலையம் கடந்த மே மாதத்தில் 25.49 பயணிகளைக் கையாண்டுள்ளது. விமான இயக்கங்களிலும் (17,306 விமானங்கள்) சென்னையை விஞ்சியுள்ளது ஹைதராபாத்.

ஜூன் மாதத்தில் நாட்டின் பரபரப்பான 10 விமான நிலையங்களில், ஏழு விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் இருக்கைத்திறன் குறைந்துள்ளது.

அதில் ஹைதராபாத்தில் 18.5 விழுக்காடும் சென்னையில் 16.6 விழுக்காடும் கோல்கத்தாவில் 11 விழுக்காடும் சரிவு பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்