கூட்டாட்சியின் சமநிலையைக் குலைக்கும் மத்திய அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டாட்சியின் சமநிலையைக் குலைக்கும் மத்திய அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 mins read
a728313d-5dc8-4ff0-958d-5b679a94d415
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: பாஜக முன் அதிமுக மண்டியிட்டாலும் திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை தொடர்பாக அவர் மீண்டும் தனது கவலையை அறிக்கை ஒன்றின் வழி வெளிப்படுத்தி உள்ளார்.

பாஜகவின் இந்த நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

“மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும் அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.

“மத்திய பாஜக அரசின் போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.

“இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது,” என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பாஜக நிர்ணயித்துக்கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் சொல்வது தெளிவற்ற மழுப்பல் பதில் என்றும். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே நமது கோரிக்கை,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்